பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்றதற்காக இப்பெண் கைதா ?

பரவிய செய்தி
தன்னை கற்பழிக்க முயன்ற இருவரை காென்றுவிட்டாள் இந்த வீரப்பெண்.. கிடைத்த பரிசு கைது இந்த பெண் செய்தது சரியா தவறா ?
மதிப்பீடு
விளக்கம்
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இருவரை கொன்ற இப்பெண்ணை கைது செய்ததாகக் கூறி இளம்பெண் ஒருவரை பெண் போலீஸ் அழைத்து செல்லும் பழைய புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் பதிவை காண நேரிட்டது. இதே பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் சுற்றி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” சுபா சங்கர் நாராயணன் கைது ” என முடிவுகள் காண்பித்தது. மேலும், சில செய்திகளும் காண்பிக்கப்பட்டன.
சுபா சங்கர் நாராயணன் கைது குறித்து தேடுகையில், 2014-ல் mangaloretoday என்ற செய்தி இணையதளத்தில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட நபரை கொன்ற குற்றவாளி பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதாக அதே பெண்ணின் மற்றொரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” 2003-ம் ஆண்டு நவம்பரில் பெங்களூரில் 27 வயதான பிவி கிரிஷ் என்பவருக்கும் 21 வயதான சுபா ஷங்கர் நாராயணன் என்ற பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற்றது. நிச்சயம் முடிந்த சில நாட்களில் இருவரும் உணவருந்த வெளியே சென்ற போது சுபாவின் காதலன் வர்மா மற்றும் நண்பர்கள் உடன் இணைந்து கிரிஷ்-ஐ தாக்கி உள்ளனர். இதனால் கிரிஷ் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில், 2010-ல் சுபா உள்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது கர்நாடகா நீதிமன்றம். ஜாமீன் கேட்டு சுபா தொடர்ந்த வழக்கில் 2014-ல் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது ” என வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனைக் கொன்ற இளம்பெண்| விடுவித்த எஸ்.பி !
மேலும் படிக்க : தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
முடிவு :
நம் தேடலில், தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற இருவரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் சுபா ஷங்கர் நாராயணன். இவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்றதற்காக கைது செய்யப்படவில்லை, தன் காதலனுடன் சேர்ந்து தனக்கு நிச்சயம் செய்யப்பட்டவரை கொன்றதாக ஆயுள் தண்டனை பெற்றவர் என அறிய முடிகிறது.