தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்.. திரித்து வெளியிட்ட தந்தி டிவி.. உண்மையான எண்ணிக்கை இதோ !

பரவிய செய்தி
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் பெண்கள் காணாமல் போனது தொடர்பாகத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ‘கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 58 ஆயிரம் பெண்கள் மாயமாகி இருக்கிறார்கள்😥
மாயமாகி என்றால் என்ன அர்த்தம் அவர்கள் பிணம் கூட கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
இந்த லட்சணத்தில் திமுக தலைவர் கனிமொழி மணிப்பூர் பெண்களுக்காக போராட்டம் பண்றாங்களாம்.🤦♂️🤦♂️🤦♂️
தமிழகத்தில் சட்டம்… pic.twitter.com/jJN3s0FsY3
— Johny Bhai 🇮🇳 (@Johni_raja) July 31, 2023
இதே போன்று இந்தியா முழுவதும் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் என்ற தலைப்பில் நியூஸ் 7, மாலை மலர், IBC தமிழ், Etv பாரத் போன்ற ஊடகங்களும் கட்டுரை வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன ?
தந்தி டிவி நியூஸ் கார்டில் குறிப்பிட்டுள்ள கடந்த 3 ஆண்டு என்பது 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டை குறிப்பிடுகிறது. இந்த தகவலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டதாகவும் அந்த நியூஸ் கார்டில் உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்தோம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஃபௌசியா கான் நாட்டில் காணாமல் போன பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குக் கடந்த 26ம் தேதி (ஜூலை) ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2019 முதல் 2021ம் ஆண்டு வரைக்கான தகவல் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகவலில் 2019ம் ஆண்டு 4022 பெண் குழந்தைகள், 11636 பெண்கள், 2020ம் ஆண்டு 4420 பெண் குழந்தைகள், 13878 பெண்கள் காணவில்லை. மேலும், 2021ம் ஆண்டு 5949 பெண் குழந்தைகளும், 18015 பெண்களும் காணவில்லை என ஒவ்வொரு ஆண்டும் தனித் தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையைக் கூட்டி தந்தி டிவி 57 ஆயிரம் பெண்கள் காணவில்லை எனச் செய்தி வெளியிட்டது. தரவை பற்றி எந்த அடிப்படை ஆய்வும் செய்யாமல் பொத்தாம் பொதுவாக தவறான தகவலைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவில் உள்ள பிழை :
2019 முதல் 2021ம் ஆண்டு வரையில் காணாமல் போன பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றி உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் அளித்த பதிலில் உள்ள எண்ணிக்கையையும், அவ்வாண்டுகளில் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.
ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போனவர்கள் தொடர்பாகப் பதிவான வழக்கின் எண்ணிக்கை மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு இதே பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையின் கூட்டுத் தொகையினையே உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் பதிலாக அளித்துள்ளது.
உதாரணமாக, 2019ம் ஆண்டு தரவுகளைப் பார்ப்போம். தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டுக்கு முன் காணாமல் போய் கிடைக்காத பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 698. 2019ம் ஆண்டு பதிவான வழக்கு 3324. இவை இரண்டையும் சேர்த்து 4022 வழக்குகள் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த ஆண்டுகளில் எவ்வளவு பேர் மீட்கப்பட்டார்கள் என்பது குறித்து எந்த தகவலும் அவர்கள் அளித்த பதிலில் இல்லை. ஆனால், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையில் மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெண் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக 2019ம் ஆண்டின் மொத்த வழக்குகள் 4022 (698 + 3324). அவ்வாண்டு மீட்கப்பட்டவர்கள் 3147. மீட்கப்படாத குழந்தைகள் 875.
அடுத்ததாக 2020ம் ஆண்டு காணாமல் போன பெண் குழந்தைகள் தொடர்பான மொத்த வழக்குகள் 4420 (875 + 3545). மீட்கப்பட்டவர்கள் 3385. மீட்கப்படாத குழந்தைகள் 1035.
அதே போல் 2021ம் ஆண்டின் மொத்த வழக்குகள் 5949 (1035 + 4914). மீட்கப்பட்டவர்கள் 4832. மீட்கப்படாத குழந்தைகள் 1117. அதாவது 2021ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் காணாமல் சென்று மீட்கப்படாமல் இருக்கும் எண்ணிக்கை 1117.
காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை :
(NCRB அறிக்கையில் மொத்தமாக காணாமல் போன பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பெண் குழந்தைகள் போக மீதம் உள்ள பெண்களின் எண்ணிக்கை மட்டும் இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது.)
தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு பெண்கள் காணாமல் போனதன் மொத்த எண்ணிக்கை 11,636 (3680 + 7956). மீட்கப்பட்டவர்கள் 7150. மீட்கப்படாத பெண்கள் 4486.
2020ம் ஆண்டு மொத்த எண்ணிக்கை 13,878 (4486 + 9392). மீட்கப்பட்டவர்கள் 8653. மீட்கப்படாதவர்கள் 5225. அடுத்த 2021ம் ஆண்டு மொத்த எண்ணிக்கை 18015 (5225 + 12790). மீட்கப்பட்டவர்கள் 11968. மீட்கப்படாதவர்கள் 6047.
அதாவது 2021ம் ஆண்டு நிலவரப்படி 6047 பெண்கள் காணாமல் போய் கிடைக்காமலோ அல்லது அவர்கள் பற்றிய தகவல் தெரியாமலோ உள்ளது. மொத்தத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் தமிழ்நாட்டில் காணாமல் போய் கிடைக்காமல் உள்ளவர்களின் எண்ணிக்கை 7164.
ஒன்றிய அரசும் தவறாகப் புரிந்து கொள்ளும்படி பாதி தரவுகளை மட்டும் அளித்துள்ளது. ஊடகங்களும் ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாட்டில் 2019 முதல் 2021 வரையில் 57 ஆயிரம் பெண்கள் மாயமாகி அவர்களது நிலை என்ன வென்றே தெரியாத நிலை உள்ளது போலச் செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஆராய்ந்து பார்க்கையில் தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் வழக்குகளே நிலுவையில் உள்ளது.
இதே போல் இந்தியா முழுவதும் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மேற்கண்ட எந்த செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் 2019-2021ம் ஆண்டு வரையில் காணாமல் போன பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 57 ஆயிரம் என ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது. ஒவ்வொரு ஆண்டும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வைத்து ஆய்வு செய்ததில் தற்போது சுமார் 7 ஆயிரம் வழக்குகளே நிலுவையில் உள்ளன.