வினோத உருவம் உண்மையில் என்ன ?

பரவிய செய்தி

கேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அது 1000 வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும், பூமியில் உள்ள எந்த ஒரு உயிரினத்தின் செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம். இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் பீதி அடைவார்கள் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். இதை விலைக்கு வாங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. உடனடியாக பகிரவும்.

மதிப்பீடு

விளக்கம்

அபூர்வமான உயிரினம் என்று பரவிய படத்தில் இருப்பதை பார்த்தாலே தெரிகிறது அது உண்மையில்லை என்று, அந்த அளவிற்கு அருமையான கதையை இப்படங்களுடன் இணைத்துள்ளனர். எனினும், சிலர் இதனை உண்மையென்று நம்பக்கூடிய மனநிலையில் இருப்பர். அவர்களை போன்றவர்களுக்கு இப்படத்தில் இருப்பது பற்றியத் தெளிவான விளக்கத்தை அளிப்போம்.

Advertisement

இது அபூர்வமான உயிரினம் ஒன்றுமில்லை, சாதாரண பொம்மை. பொம்மை என்று சொன்ன உடன் சிரிப்புதான் வரும் ! ஆம், உண்மையில் இது பொம்மைதான், அதும் சிலிகான் பொம்மை. சிலிகானை பயன்படுத்தி தத்துரூபமான தோற்றம் கொண்ட பொம்மைகள் செய்யும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த Laira Maganuco என்ற கலை வடிவமைப்பாளர் உருவாக்கிய தத்துரூபமான 72 செ.மீ உயர ஹைப்ரிட் பெண் சுண்டெலிதான் இது. சிலிகானைப் பயன்படுத்தி ஒரே ஒரு வித்தியாசமான தோற்றம் கொண்ட சுண்டெலியை வடிவமைத்துள்ளார். தனது படைப்பாற்றலை விதவிதமாகக் காட்டில் இருப்பது போன்று புகைப்படங்களை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் Laira.

மற்ற பொம்மைகள் போன்று வடிவமைக்காமல் வித்தியாசமான தோற்றத்தில் உறுப்புகள் தெரியும்படி அமைக்க வேண்டும் என வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டதால் இத்தகைய ஹைப்ரிட் பொம்மையை வடிவமைத்துள்ளார்.

அதனை பல்வேறு கோணத்தில் எடுத்த படங்களும், மேசை மீது வைக்கப்பட்ட படமும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறு தத்துரூபமான சிலிகான் பொம்மையை அரிய உயிரினம் என்றெல்லாம் கூறி கதைக்கட்டி விட்டுள்ளனர். எனினும், இது முதல் முறை அல்லவே.

மனிதன் மற்றும் சிங்கத்தின் உடலமைப்பை கொண்ட குழந்தை : 

சிங்கம் மற்றும் மனிதனின் உடலமைப்பு கொண்ட புதிய உயிரினம் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் இப்படங்கள் அதிகம் வைரலாகியதை பார்க்கலாம்.

பாதி சிங்கம், பாதி மனிதன் என்று பரவிய படத்தில் இருப்பதும் பொம்மையே. அதை வடிவமைத்தவரும் Laira Maganuco தான். இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ Licantropo ” என்று அழைத்துள்ளார்.

இவை மட்டுமின்றி பல விதமான தோற்றமுடைய சிலிகான் பொம்மைகள், சிலிகான் உடைகள் போன்றவற்றை வடிவமைத்துள்ளார் Laira Maganuco.

நம்ம ஊர் ஆட்கள் போடும் ஃபேக் நியூசை மட்டும் Laira Maganuco க்கு தெரிந்தால் அவரது முகத்தில், “ காட்டுக்குள்ள பொம்மையை வச்சு ஃபோட்டோ எடுத்தது ஒரு குத்தமாடா ” என்ற வடிவேலு ரியாக்சன்தான் தென்படும்.

பன்றி மனிதன் உருவம் : 

சமீபத்தில் பன்றிக்கு மனித உருவிலான ஆண் பன்றி பிறந்துள்ளதாக இணையத்தில் வைரலாகியது. இதை வைத்து கேலி செய்யும் விதத்திலும் மீம்கள் வலம் வரத் துவங்கியுள்ளன.

மனித உருவத்தில் பன்றி குட்டி பிறந்ததாகக் கூறும் புகைப்படங்களில் இருப்பது வெறும் பன்றி சிலிக்கான் பொம்மைகளே..! சிலிக்கான் பொம்மைகள் பற்றி பலரும் அறியாமல் உள்ளனர். 

வினோத உருவம் எனப் பரவி வைரலாகிய சிலிக்கான் பொம்மைகளை வடிவமைத்த Laira Maganuco தான் பன்றி மனித உருவிலான சிலிக்கான் பொம்மைகளை உருவாக்கி உள்ளார். இதைப் பற்றிய பதிவை Laira Maganuco தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற பல உருவங்களில் சிலிக்கான் பொம்மைகளை வடிவமைத்துள்ளனர். Etsy இணையதளத்தில் பல உருவங்களில் வடிவமைத்த சிலிக்கான் பொம்மைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் அதிசய உயிரினம் : 

2018 நவம்பர் மாதத்தில் ஆந்திராவின் ஸ்ரீ ஹரிகோட்டாவில் பிடிபட்ட அதிசய உயிரினம் என மீண்டும் சிலிகான் பொம்மை கொண்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button