சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் | செய்தி உண்மையா ?

பரவிய செய்தி
சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி. இவர் செய்தது சரி என்றால் Yes னு கமெண்ட் பண்ணுங்க !
Do you support police? Yes or No?
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் சிறுமிகள், பச்சிளம் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருவது அனைவரிடத்திலும் வருத்தத்தையும், கோப அலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தீர்வு என்ன என்பதை எதிர்நோக்கியும் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இப்படி இந்தியாவில் நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமூக வலைதளங்களில் முக்கிய பேசு பொருளாக உருவெடுக்கும். அதிலும், பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் கயவர்களை போலீஸ் அதிகாரிகள் தாக்கியதாக வெளியாகும் பதிவுகளை ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து சமூக வலைதளவாசிகள் மகிழ்ச்சி கொள்வர்.
ஆகஸ்ட் 4-ம் தேதி karthika என்ற முகநூல் பக்கத்தில் ” சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் அதிகாரி காயத்ரி. இவர் செய்தது சரி என்றால் Yes னு கமெண்ட் பண்ணுங்க ! ” என்ற பதிவுடன் காவல் அதிகாரி உடையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தனர். அப்பதிவானது 1,400 ஷேர்களை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பாலியல் குற்றவாளிகளின் ஆணுறுப்பை காவல் அதிகாரி சுட்டு தண்டித்தார் என பதிவிட்டால் மக்கள் அதனை உண்மை என நினைத்து பாராட்டுகளையும், அதிக அளவில் பகிரவும் செய்கின்றனர். ஆனால், அவ்வாறான பதிவுகளில் கூறப்படும் சம்பவம் எங்கு, எப்பொழுது நிகழ்ந்தது, அது குறித்த செய்திகள் என எந்தவொரு ஆதாரத்தையும் இணைப்பதில்லை. அதனை கவனித்தாலே செய்தி உண்மையா என்பதை மக்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
காயத்ரி எனும் பெயரை இடம்பெற்றால், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததா என்பதை தேடினோம். அதுகுறித்த செய்திகள் இடம்பெற்றவில்லை. எனினும், வைரலாகிய புகைப்படத்தில் இருப்பவர் யார் என்பதை தேடினோம்.
அதிலிருந்து, மலையாளத்தில் வெளியாகிய “ பரஸ்பரம் ” எனும் தொலைக்காட்சி சீரியலில் தீப்தி ஐபிஎஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதை அறிய முடிந்தது. அவரின் உண்மையான பெயர் காயத்திரி அருண். அவருக்கென முகநூலில் ரசிகர்கள் பக்கம் ஒன்று உள்ளது. அதில், வைரலாகிய புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.
மேலும் படிக்க : பீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்களை சுட்டுக் கொன்ற அதிகாரியா ? | உண்மை என்ன ?
பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றவாளியின் ஆணுறுப்பில் பெண் காவல் அதிகாரி சுட்டதாக முகநூலில் பதிவிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற செய்திகள் பல ஆண்டுகளாக வைரலாகி உள்ளன.
முடிவு :
தொலைக்காட்சி சீரியலில் போலீஸ் வேடத்தில் நடித்த பெண் ஒருவரின் புகைப்படத்தை எடுத்து ” பாலியல் சில்மிஷம் செய்த குற்றவாளியின் ஆணுறுப்பை சுட்ட காவல் அதிகாரி ” என தவறான செய்திகளை பரப்பி உள்ளனர் என்பதை கிடைத்த ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழகத்தில் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை. மக்கள் முகநூலில் பதிவிடப்படும் செய்திகளை உண்மை என அப்படியே ஏற்காமல் அதன் உண்மைத்தன்மைக் குறித்து சிறிது தெரிந்து கொண்டு பகிருங்கள்.