பெண்களின் பாதுகாப்பிற்காக IPC சட்டம் 233-னை பிரதமர் மோடியின் அரசு கொண்டுவந்துள்ளதா ?

பரவிய செய்தி

இறுதியாக புதிய சட்டம் ஒன்றை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய தண்டனை சட்டம்( Penal Code) 233-ன் படி, தன்னை பாலியல்ரீதியான தொல்லை மற்றும் பாலியல் வன்புணர்வு செய்ய முனையும் நபரை அப்பெண் தற்காப்பிற்காக கொலையே செய்தாலும் தவறில்லை, அதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையாக தாக்கினாலும், கொலை செய்தாலும் அந்த பெண் மீது குற்றமில்லை என்று கூறியுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

Penal Code 233 தண்டனைக்குரிய சட்டமாக இருந்தாலும் எந்த குற்றத்திற்கான சட்டம் என்பதை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.

விளக்கம்

இந்தியா நவநாகரீக நாடாக மாறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் குறைந்தபாடில்லை. பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் பாலியல்ரீதியான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.

Advertisement

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல்ரீதியான கொடுமைகளில் சிக்கி கொள்ளும் பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில், வன்புணர்வு செய்ய முற்படும் ஆண் நபரின் பிறப்புறப்பை அல்லது அந்த நபரை உயிர் போகும் அளவிற்கு தாக்கினாலோ, அந்த நபர் இறந்தே போனாலும் அப்பெண் குற்றவாளியாக கருதப்பட மாட்டார்கள். இத்தகைய உரிமையை இந்திய தண்டனை சட்டம்( Indian Penal Code) 233, பாதிக்கப்படும் பெண்களுக்காக வழங்குகிறது என்று சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்படுகிறது. மேலும், இந்த சட்டத்தை மோடியின் அரசு கொண்டு வந்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

இந்திய தண்டனை சட்டம்( Indian Penal Code) 233 , பாலியல்ரீதியான குற்றங்களுக்கு தொடர்பான சட்டப் பிரிவு இல்லை. இந்த சட்டமானது, இந்தியாவில் கள்ள நாணயங்களை தயாரிக்கும் கருவியை பயன்படுத்துவது, கள்ள நாணயங்களை வாங்குவது, தயாரிப்பது, விற்பது போன்ற குற்றங்களுக்கான IPC பிரிவு ஆகும். இந்த குற்றத்தை செய்பவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க வாய்ப்பில்லை. மேலும், இதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இந்தியாவில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள புதிதாக சட்டம் ஒன்றும் இயற்றப்படவில்லை. எனினும், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தான நிலையில் ஒரு நபர் தன்னை தற்காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் புரியும் உரிமையை வழங்குகிறது. அதன்படி “ IPC Section 100 ” என்ற பிரிவின் கீழ், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், கடத்தல், ஆசிட் தாக்குதல் அல்லது ஆசிட் தாக்குதல் முயற்சியின் போது, பாலியல் வன்புணர்வு போன்ற ஆபத்தான நிலையில் எதிர் தாக்குதல் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற உயிர்க்கு ஆபத்தான தாக்குதலின் போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலோ உடற்காயங்கள் ஏற்பட்டாலோ அது சட்டப்படி குற்றமாகாது இந்த உரிமையை பெண்கள் மட்டுமல்லாமல் இந்திய குடிமகன் யார் வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் போது தற்காத்து கொள்ளும் உரிமையை இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்டு வந்தாலும்,  இந்திய தண்டனை சட்டம் 233 என்ற புதிய சட்டத்தை இயற்றப்பட்டதாக பல ஆண்டுகளாக புரளியைப் பரப்பி வருகின்றனர். மேலும், தற்போது மோடி அரசுதான் இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் தொடர்ந்து புரளிகள் பரப்பப்படுகின்றன.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button