கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண் என ஊடகங்களில் வெளியான வீடியோ போலியானது !

பரவிய செய்தி
கணவரின் பெயரை தனது நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரை சேர்ந்த பெண்!
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்டதாகத் தினமலர், சன் நியூஸ், நியூஸ் 7 தமிழ், தந்தி டிவி, இந்து தமிழ் திசை, மாலை மலர் போன்ற பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெற்றியில் கணவன் பெயர்: ‘பச்சை’யாக பாசத்தை காட்டிய பெண் https://t.co/MsPFhaHvZK pic.twitter.com/tsZ6wh9p3K
— Dinamalar (@dinamalarweb) May 21, 2023
கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட பெங்களூரு பெண்#India | #Tattoo | #Bengaluru | #Womanhttps://t.co/5oYA5RhD9w
— Tamil The Hindu (@TamilTheHindu) May 22, 2023
உண்மை என்ன ?
நெற்றியில் பச்சை குத்தியதாக வெளியான செய்திகளில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோவில் இந்த நிகழ்வு நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோ பக்கத்தினை தேடினோம். அவர்களது பக்கத்தில் உள்ள தொலைப்பேசி எண்ணிற்கு யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதில், அந்த ஸ்டுடியோவின் உரிமையாளரின் பெயர்தான் சதீஷ் எனத் தெரிந்தது.
சதீஷ் கூறியதாவது, “கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளர் நான் தான். நெற்றியில் பச்சை குத்திக்கொண்டதாக வெளியான செய்தியில் உள்ள பெண் எனது மனைவி ரக்ஷா. அந்த வீடியோவினை நாங்கள் மார்ச் மாதம் வெளியிட்டோம். அது உண்மையில் பச்சை குத்தப்பட்ட வீடியோ அல்ல. ஒரு விளம்பரத்திற்காகச் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த வீடியோ முதன் முதலில் வெளியிட்டபோதே வைரலானது. தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது எனக் கூறினார்.
View this post on Instagram
நீங்கள் முகத்தில் பச்சை குத்துவீர்களா எனக் கேட்டதற்கு, அப்படி யாராவது குத்தச் சொல்லிக் கேட்டால் வேண்டாம் என்பதுதான் எங்களது பரிந்துரையாக இருக்கும். அப்படிச் சொல்லியும் முகத்தில் குத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் நாங்கள் குத்துவோம் என விளக்கமளித்தார்.
மேலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து பெங்களூரில் நடனம் மற்றும் டாட்டூ தொழில் செய்து வருவதாகவும், தற்போது வைரலாகும் வீடியோவின் இரண்டாம் பகுதியும் எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட தொலைக்காட்சிகளில் நடைபெற்ற சில நடன நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக வீடியோவினை பகிர்ந்தார்.
View this post on Instagram
மேலும், ரக்ஷாவின் சமீபத்திய வீடியோக்களில் அவரது நெற்றியில் பச்சை குத்தப்பட்டு இல்லை என்பதையும் காண முடிகிறது. இவற்றிலிருந்து ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல என்பதும், அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதும் அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், கணவரின் பெயரைத் தனது நெற்றியில் பச்சை குத்திய மனைவி என ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல. அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என அப்பெண்ணின் கணவரும், அக்கடையின் உரிமையாளருமான சதீஷ் யூடர்னுக்கு விளக்கமளித்துள்ளார்.