2004-ல் பெண்கள் நீதிமன்றத்தில் நுழைந்து பாலியல் குற்றவாளியை கொன்ற சம்பவம் !

பரவிய செய்தி
2004-ம் ஆண்டு இந்தியாவின் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஒவ்வொரு முறையும் ஜாமீன் கிடைத்த காரணத்தினால் 200 பெண்கள் நீதிமன்றத்திற்குள் கற்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் நுழைந்து குற்றவாளியை நீதிபதி முன்பாக கொன்றுள்ளனர். முதல் முறையாக பொதுமக்களால் நீதி வழங்கப்பட சம்பவம் இதுவே. அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மதிப்பீடு
விளக்கம்
2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மதியம் 3 மணியளவில் நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அக்கு யாதவ் என்ற கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றவாளியை கஸ்தூர்பா சேரியை சேர்ந்த பெண்கள் அடங்கிய மக்கள் கூட்டம் நீதிமன்றத்தில் வைத்தே தாக்கி கொன்ற சம்பவமே தற்பொழுது அதிகம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அக்கு யாதவ் தொடர்ச்சியாக கஸ்துர்பா சேரி பகுதியில் வசிக்கும் பெண்களை மிரட்டுவது, துன்புறுத்துவது, இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்ணையும் பாலியல் வன்புணர்வு செய்தது என பல புகார்கள், வழக்குகள் அக்கு யாதவ் மீது தொடரப்பட்டது. எனினும், வழக்கில் ஜாமீன் வாங்கிக் கொண்டு மீண்டும் அட்டூழியங்களை செய்துள்ளார். அங்குள்ள மக்களிடம் பயத்தை உருவாக்கி வைத்திருந்தான் அக்கு யாதவ்.
அப்பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாமல் , முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டியும் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டு இருத்தது.
இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத மனநிலைக்கு வந்த கஸ்தூர்பா சேரியில் வசிக்கும் மக்கள் மிளகாய் பொடி, கற்கள், காய்கறி வெட்டும் கத்தியுடன் சென்று நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அக்கு யாதவை தாக்கி உள்ளனர். முகத்தில் மிளகாய் பொடியை தூவி, கற்களால் தாக்கியதுடன், பாதிக்கப்பட்ட பெண் மூலம் யாதவின் ஆண் உறுப்பு கத்தியால் வெட்டப்பதாக தி கார்டியன் செய்தியில் 2005-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகி இருக்கிறது. அக்கு யாதவ் உடலில் 70 வெட்டுக் காயங்கள் இருந்ததாக செய்தியில் தெரிவித்து இருந்தன.
நீதிமன்றத்தில் வைத்து குற்றவாளியை கும்பலாக கொலை செய்த சம்பவத்தால் வளாகமே இரத்தமாய் காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் 200 பெண்கள் இணைந்து குற்றவாளியை கொன்றதாக செய்திகள் பலவற்றிலும் வெளியாகி இருக்கிறது. எனினும், இந்த கும்பல் தாக்குதலில் பலரின் மீது வழக்கும் பாய்ந்தது. 6 பெண்கள் உள்பட 21 பேர் மீது பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்றன.
2014 நவம்பர் மாதம், அக்கு யாதவ் கொலை சம்பவ வழக்கில் இணைக்கப்பட்ட 21 பேர் குற்றவாளிகள் என்பதற்கான சரியான காரணமோ, நேரடி சாட்சி இல்லை என மகாராஷ்டிரா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பிற பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு பிறகு 2004-ம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் குற்றவாளி அக்கு யாதவ் கொலை சம்பவத்தின் செய்தியே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் தரப்பில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், வழக்குகள் உடனடியாக முடித்து வைக்கப்பட வேண்டும் என்பது மக்கள் தரப்பு கருத்து.
Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .