தமிழ்நாட்டில் உள்ள மரத்தாலான மின்கம்பம் எனப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி
இந்த ஆட்சியின் இரண்டாண்டு சாதனையை கண்டு வியந்து போனேன்Facebook Link
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 2021 மே 7 அன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டது. திமுக ஆட்சிக்கு வந்து தற்போது இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த ஆட்சியின் இரண்டாண்டு சாதனையை கண்டு வியந்து போனேன் எனக் கூறி மரத்தில் மேலே மின் கம்பிகள் இணைக்கப்பட்டு இருக்கும் மரத்தாலான மின்கம்பத்தின் புகைப்படம் ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பகிரப்படும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்க்கையில், இதே போன்ற புகைப்படம் பல்வேறு நாடுகளின் சமூக வலைதளப் பக்கங்களில் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது. மேலும் இந்த மின்கம்பம் தமிழ்நாட்டில் இருக்கிறது எந்த பதிவுகளும் இல்லை.
மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படம் கடந்த 2021 ஏப்ரல் 10 அன்று Mtoto wa Africa என்னும் கிழக்கு ஆப்பிரிக்காவின் Tanzania நாட்டைச் சேர்ந்த முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில் அந்நாட்டு அரசின் CAG அமைப்பிற்கு எதிராக பதிவிடப்பட்டு அதில் தற்போது பரவி வரும் மரத்தாலான மின்கம்பத்தின் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 செப்டம்பர் 26 அன்று போலந்து நாட்டைச் சேர்ந்த Eaton செய்தி தளத்தில், ”பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மரத்தாலான மின்கம்பங்கள்” எனக் தலைப்பிடப்பட்டு தற்போது பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும் அதில் பாகிஸ்தான் என டேக் செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
இவ்வாறான மரத்தாலான மின்கம்பங்கள் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டது தொடர்பான செய்திகள் 2018ல் வெளியாகி இருக்கிறது.
இதே போன்ற மரத்தாலான மின்கம்பத்தின் புகைப்படம் கடந்த 2022-ல் உத்திர பிரதேசத்தில் உள்ள மின்கம்பம் என்றும், கடந்த 2021-இன் போது குஜராத்தில் உள்ள மின்கம்பம் என்றும் சமூக வலைதளங்களில் தவறாகப் பரவியது குறிப்பிடத்தக்கது. இதன் உண்மைத் தன்மை குறித்த செய்திகளையும் தொகுத்து கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம். இதைக் கீழே காணலாம்.
மேலும் படிக்க: வைரலாகும் மரத்தால் ஆன மின்கம்பத்தின் புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதா ?
மேலும் இதே போன்று மரத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்ஃபார்மர் எனக் கூறி, பிற நாடுகளில் பரவிய புகைப்படத்தை இந்தியாவில் வைரல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா ?
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனையைக் கண்டு வியந்து போனேன் எனக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் மரத்தால் ஆன மின்கம்பத்தின் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல.
இப்புகைப்படம் கடந்த 2021 செப்டம்பர் 26 அன்று பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் உள்ள மின்கம்பம் என்றும், கடந்த 2021 ஏப்ரல் 10 அன்று கிழக்கு ஆப்பிரிக்காவின் Tanzania நாட்டைச் சேர்ந்த மின்கம்பம் என்றும் வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.