உலக காப்பர் உற்பத்தியில் 25 சதவீதத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் உற்பத்தி செய்ததாகப் பரப்பப்படும் பொய்

பரவிய செய்தி
உலகத்தில் மொத்தம் உற்பத்தி செய்யப்படும் காப்பரில், 25 சதவீதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. – சந்தியா ரவிஷங்கர்
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட கோரி 2018ம் ஆண்டு தொடர்ந்து 100 நாட்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வருடம் மே மாதம் 22ம் தேதி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பொது மக்கள் பலர் காயம் அடைந்தது மட்டுமில்லாமல், 13 பேர் உயிர் இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2018 மே 28ம் தேதி அந்த ஆலையை மூடுவதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. சமீபத்தில் தூத்துக்குடி போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியக் குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களைத் தூண்ட வெளிநாடுகளிலிருந்து நிதி அளிக்கப்படுகிறது என அவர் பேசி இருந்தார்.
இந்நிலையில் உலகின் மொத்த காப்பர் உற்பத்தியில் 25 சதவீதம் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதாகச் சந்தியா ரவிஷங்கர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
‘வியன் தமிழ்’ என்னும் யூடியூப் பக்கத்திற்குச் சந்தியா ரவிஷங்கர் அளித்த நேர்காணலின் முழு வீடியோ அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவின் தொடக்கத்தில் “ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாடுகளிலிருந்து நிதி வருகிறது எனத் தமிழ்நாடு ஆளுநர் கூறி இருந்தார். அதேபோல், உள்துறை அமைச்சரும் ரூ.3.5 கோடி வந்துள்ளதாக ஆதாரத்துடன் கூறியிருந்தார்” என்று நெறியாளர் பேச்சைத் தொடங்குகிறார்.
இது குறித்து இணையத்தில் தேடியதில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரன்பாய் ரத்வா பாராளுமன்றத்தில் ‘தி அதர் மீடியா’ என்னும் தொண்டு நிறுவனம் குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு, தி அதர் மீடியா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அமைச்சகத்திற்கு ஏதேனும் புகார் வந்துள்ளதா? புகார் வந்திருப்பின் அதன் விவரம்? அத்தொண்டு நிறுவனம் பெற்ற மற்றும் செலவழித்த நிதி விவரம்? மற்றும் அரசின் நடவடிக்கை? ஆகிய கேள்விகளை முன்வைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில், தி அதர் மீடியா என்னும் தொண்டு நிறுவனத்தின் மீது சில புகார்கள் வந்துள்ளன. அந்நிறுவனத் தரப்பிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது (Standard Questionnaire). அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுவதற்கான அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 3 நிதியாண்டுகளில் இந்நிறுவனம் ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி பெற்றுள்ளது என்றும், அதில் ரூ.2.79 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட செய்தியின் தலைப்பில், “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட பின்னணியில் என்ஜிஓ – மாநிலங்களவையில் தகவல்” எனத் தவறாகப் பொருள் கொள்ளும்படி குறிப்பிட்டுள்ளது. ஆனால், விசாரிக்கப்பட்டு வருவதாகவே இணை அமைச்சர் கூறியுள்ளார். அவர் அளித்த பதிலில் எந்த இடத்திலும், தி அதர் மீடியா வெளிநாட்டுப் பணத்தின் மூலம் தூத்துக்குடி போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறவில்லை. இவற்றிலிருந்து நெறியாளர் அளித்த தகவல் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.
சந்தியா ரவிஷங்கர் கூறியது உண்மையா ?
உலகில் உற்பத்தி செய்யப்படும் காப்பரில் 25 சதவீதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாகச் சந்தியா ரவிசங்கர் கூறியது குறித்து இணையத்தில் தேடினோம்.
காப்பர் உற்பத்தி குறித்து USGS (United States Geological Survey) வெளியிட்ட தரவில், 2014 முதல் 2017 வரை (ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு முன்புவரை) காப்பர் உற்பத்தியில் உலக நாடுகளின் பங்களிப்பு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு இந்தியாவில் 8,23,100 மெட்ரிக் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவ்வாண்டு உலகில் ஒட்டு மொத்தமாக 1.91 கோடி மெட்ரிக் டன் தாமிரம் உற்பத்தியாகியுள்ளது. உலகில் செய்யப்பட்ட மொத்த தாமிர உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4.3 சதவீதம் தான். அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் ஏறத்தாழ இதே அளவே இருந்துள்ளது.
அதே அறிக்கையில் 2018ம் ஆண்டு இந்தியாவின் தாமிர உற்பத்தி சுமார் 33 சதவீதம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்குக் காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் சார்ந்த விதிமுறைகளைப் பின்பற்றாததினால் தமிழ்நாடு அரசு அதனை மூடியது பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் இயங்கிய காலத்திலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காப்பரில் சுமார் 40 சதவீதம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து முன்னரே யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், உலகில் உற்பத்தி செய்யப்படும் காப்பரில் 25 சதவீத தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படும் தகவல் உண்மை அல்ல. 2017ம் ஆண்டு உலக காப்பர் உற்பத்தியில் இந்தியாவின் மொத்த பங்கே சுமார் 4 சதவீதம் என்பதை அறிய முடிகிறது.