இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் | ஐநாவின் பட்டியல்.

பரவிய செய்தி
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலை ஐநா சபை அறிவித்தது . அதில், சோமாலியா 76-வது இடம், இந்தியா 118-வது இடத்தைப் பிடித்து உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தரவுகள் ஆக இருக்கலாம். ஏனெனில், 2019 மார்ச் 20 வெளியான உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 வது இடத்திற்கு சரிந்து உள்ளது.
விளக்கம்
சர்வதேச மகிழ்ச்சி நாளான மார்ச் 20, 2019 -ல் ஐக்கிய நாடுகளின் சபை உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பின் வெளியிட்ட பட்டியலில் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு ” பின்லாந்து” என அறிவித்துள்ளனர்.
153 நாடுகளில் வசிக்கும் குடிமக்களிடம் வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, வருமானம், சமூக பாதுகாப்பு மற்றும் ஆதரவு, நம்பிக்கை, சுதந்திரம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஐநாவின் இப்பட்டியலில் 5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ” பின்லாந்து ” இரண்டாம் முறையாக முதலிடத்தில் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட ” தெற்கு சூடான் ” பட்டியலின் கடைசி இடத்தில் அமைந்துள்ளது.
சமீப ஆண்டின் அறிக்கை உலகில் மகிழ்ச்சிகரமான நிலை குறைந்துக் கொண்டே வருவதாகவும் வெளிப்படுத்தி உள்ளது. இதில், இந்தியாவின் நிலை மிக மோசமாக செல்கிறது.
2018-ல் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133-வது இடத்தில் இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்தியா கீழ் நோக்கி சரிந்து 140-வது இடத்திற்கு சென்றுள்ளது. சீனா 93-வது இடத்திலும், பங்களாதேஷ் 125-வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடானா பாகிஸ்தான் ஐநா பட்டியலில் 67-வது இடத்தில் இருக்கிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கள் மகிழ்ச்சியற்று வாழும் தேசங்களாக தெற்கு சூடான், மத்திய ஆபிரிக்க குடியரசு(155), ஆப்கானிஸ்தான்(154), தான்சானியா (153) என பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.
உலகின் வல்லரசு மற்றும் பணக்கார நாடானா அமெரிக்கா கூட பட்டியலில் 19-வது இடத்திலேயே இருக்கிறது.
ஐ.நாவின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை ஆண்டுக்காண்டு சரிந்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அருகே இந்தியா இடம் பிடித்து இருப்பது மக்களிடம் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.