புகைப்படத்தில் இருப்பவர் உலகின் உயரமான மனிதரா ?

பரவிய செய்தி
உலகின் உயரமான மனிதர், உயரம் – 10 அடி 09 அங்குலம், எடை – 248 கிலோ, பெயர் – அன்வர் சாதிக், நாடு – ஆப்கானிஸ்தான்
மதிப்பீடு
விளக்கம்
பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாறையின் மீது நிற்கும் மனிதரே உலகின் உயரமான மனிதர் என்றும், அவரின் உயரம் மற்றும் எடை முறையே 10.09 அடி மற்றும் 248 கிலோ எனக் கூறி பகிர்ந்து வருகிறார்கள். இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.
இணையத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் நபரை பார்க்கையில் ஃபோட்டோஷாப் செய்ததாக இருக்குமோ எனத் தோன்றியது. ஏனெனில், உயரத்திற்கும், தலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும், 10.09 அடி உயரம் மற்றும் 248 கிலோ எடை கொண்ட மனிதர் அவ்வளவு சிறிய பாறையில் நிற்க முடிந்தது எனத் தெரியவில்லை. எனினும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும், அன்வர் சாதிக் தொடர்பான எந்தவொரு செய்திகளும் கிடைக்கவில்லை.
இருப்பினும், உலகின் மிக உயரமான மனிதர் யார் என அறிந்து கொள்ள தேடிய பொழுது, உலக கின்னஸ் சாதனை தளத்தை ஆராய்ந்து பார்த்தோம். 1940ம் ஆண்டில் இறந்த அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் வாட்லோ என்பவரே உலகின் உயர்ந்த மனிதர் எனும் சாதனையை தக்க வைத்து உள்ளார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கடைசியாக அளவிடப்பட்ட போது 8 அடி 11 அங்குல உயரத்தில் இருந்தார். தன்னுடைய 22வது வயதிலேயே ராபர்ட் வாட்லோ உயிரிழந்தார்.
மேலும், தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிகவும் உயரமான மனிதர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்தவர் துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசேன். அவரின் உயரம் 8 அடி 2.8 அங்குலம்.
முடிவு :
நம் தேடலில், உலகின் மிக உயரமான மனிதர் என கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட அதிகப்பட்ச உயரமே 8 அடி 11 அங்குலம் மற்றும் 10 அடி 09 அங்குலம் கொண்டவர் என பரப்பப்படும் புகைப்படம் மற்றும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.