உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடி மைதானத்தில் ஊர்வலம் போனதாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
10 மேட்ச் நல்லா விளையாடினவங்க, இந்த அளவுக்கு சொதப்பனதுக்கு, என்ன காரணம்ன்னு, இப்ப தான்டா புரியுது. ஆட்டத்துக்கு முன்னாடியே நம்ம ஜீ நடத்திய இறுதி ஊர்வலம் தான்.
மதிப்பீடு
விளக்கம்
2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியைக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிப் பெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதற்கு பிரதமர் மோடியின் வருகையே காரணம் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அப்பதிவில், மைதானத்தில் பிரதமர் மோடி வாகனம் ஒன்றில் ஊர்வலம் செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.
10 மேட்ச் நல்லா விளையாடினவங்க, இந்த அளவுக்கு சொதப்பனதுக்கு,
என்ன காரணம்ன்னு,
இப்ப தான்டா புரியுது…ஆட்டத்துக்கு முன்னாடியே நம்ம ஜீ நடத்திய இறுதி ஊர்வலம் தான் டா… pic.twitter.com/1knNLGemJ8
— சிலம்புச்செல்வி ராஜ்குமார் (@Silambuselviraj) November 20, 2023
உண்மை என்ன ?
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மைதானம் முழுவதும் நீல நிற உடையில் இந்திய ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். ஆனால், பரவும் வீடியோவில் கூட்டம் குறைவாகவும், நீல நிற உடை அரிதாக காண முடிந்தது. மேலும், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே பிரதமர் மோடி மைதானத்திற்கு வரவில்லை, போட்டி பாதி கட்டத்தை நெருங்கிய போதே வந்தார்.
ஆகையால், குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பிரதமர் மோடியின் வேறு ஏதேனும் போட்டியில் ஊர்வலம் நடந்து இருக்கிறதா எனத் தேடுகையில், 2023 மார்ச் மாதம் 9ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
டெஸ்ட் போட்டியின் போது மோடி மற்றும் அந்தோனி அல்பானீஸ் ஆகிய இருவரும் இணைந்து மைதானத்தில் ரசிகர்களுக்கு கை அசைத்து கொண்டே ஊர்வலம் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது எடுக்கப்பட்டதாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது ரசிகர்கள் அனுமன் சாலிசா பாடியதாகப் பரவும் எடிட் செய்த வீடியோ
மேலும் படிக்க : இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலியா வீரர் ட்ரவிஸ் குடும்பத்தினர் மீது குவியும் அருவருப்பான கமெண்ட்கள் !
முடிவு :
நம் தேடலில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியின் போது மைதானத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் போனதாகப் பரவும் வீடியோ தவறானது. இவ்வீடியோ கடந்த மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.