வீட்டிலிருந்தே விநாயகரை வழிபடுமாறு அமைச்சர் சேகர்பாபு கூறியதாகப் பாஜகவினர் பரப்பும் பழைய செய்தி !

பரவிய செய்தி
வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன். கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
மதிப்பீடு
விளக்கம்
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலும், நீர்நிலைகளிலும் கரைப்பதை ஒரு வழக்கமான நிகழ்வாக இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு, “வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன். கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்.” எனக் கூறியதாக தினமலரின் நியூஸ் கார்டு ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
ரொம்ப புத்திசாலி மாதிரி பேசுவதாக நினைப்பா?!
இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுபவர்கள் கோயில் பணத்தை ஏன் கை வைக்கிறீர்கள் வெட்கமாக இல்லையா?! @PKSekarbabu pic.twitter.com/kHirEyitk5
— Kalyan Raman (@KalyaanBJP_) September 12, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ்கார்டு குறித்து தினமலரின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த நியூஸ் கார்டு தற்போது வெளியிட்டது அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு ஏதாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்தும் அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடினோம். பரவி வரும் செய்திகள் குறித்து சமீபத்தில் அவர் எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை.
‛கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்,” -இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ReadMore:https://t.co/TfdQRXkVI7 pic.twitter.com/PgPXpNiqs3
— Dinamalar (@dinamalarweb) September 6, 2021
எனவே பரவி வரும் நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், இது கடந்த 2021 செப்டம்பர் 06 அன்று கொரோனா அதிகமாக பரவிய காலக்கட்டத்தில் தினமலரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி என்பதை அறிய முடிந்தது.
2021ம் ஆண்டில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்றும், தனிநபராக சிலைகளை கொண்டு செல்லலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
2021 செப்டம்பர் 4ம் தேதி சட்டசபையில் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் குறித்து பாஜக எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு, ” கொரோனா மூன்றாம் அலை உருவாகும் சூழல் இருப்பதால் மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் தான், தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ” என அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை எனப் பரவும் பழைய செய்தி !
இதற்கு முன்பும், விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்ததாகக் கூறி பழைய செய்தி ஒன்று தவறாகப் பரப்பப்பட்டது. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், வீட்டிலிருந்தே விநாயகரை வழிபடச் சொன்ன அமைச்சர் சேகர்பாபு எனப் பரவும் தினமலரின் நியூஸ் கார்டு தற்போது வெளியானது அல்ல என்பதையும், இது கடந்த 2021 செப்டம்பர் 06 அன்று கொரோனா காலக்கட்டத்தின் போதே வெளியிடப்பட்ட பழைய செய்தி என்பதையும் அறிய முடிகிறது.