1981-ல் வெளியான நாவலில் “வுஹான் 400” என கொரோனா வைரஸ் கணிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

1981-ம் ஆண்டு வெளியான ” The Eyes of Darkness ” எனும் நாவலை எழுதிய ஆசிரியர் டீன் கூண்ட்ஸ் தற்பொழுது பரவிய கொரோனா வைரஸ் குறித்தும், அது முதலில் தோன்றிய வுஹான் மாகாணம் குறித்து 39 வருடங்களுக்கு முன்பே கணித்து உள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

சீனாவின் நோவல் கொரோனா வைரஸ்(COVID-19) உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், அந்த வைரஸ் தாக்குதல் குறித்து 39 ஆண்டுகளுக்கு முன்பே நாவல் ஆசிரியர் டீன் கூண்ட்ஸ் முன் கணித்து உள்ளதாக உலக அளவில் வைரலாகியது.

” The Eyes of Darkness ” எனும் நாவலில், மனிதர்களால் ஆய்வகத்தில் வுஹான்-400 எனும் உயிரி ஆயுதம் உருவாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, நோவல் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரசே, அமெரிக்க சதி என கூறப்பட்ட நிலையில், இந்த புத்தகம் கூடுதல் ஆதாரமாக பார்க்கப்பட்டது. இந்த புத்தகத்தை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து இருந்தார்.

Twitter link | archived link 

உண்மை என்ன ? 

அமெரிக்க நாவலாசிரியர் டீன் கூண்ட்ஸ் எழுதிய ” The Eyes of Darkness ” நாவலில், வுஹான்-400 வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. வுஹான்-400 வைரஸ் மனிதர்களை மட்டுமே தாக்கும், மற்ற உயிரினங்களை பாதிக்காது. இந்த உயிரி ஆயுதத்தால் மனிதரின் உடலுக்கு வெளியே 1 நிமிடத்திற்கு மேலே உயிர் வாழ இயலாது ” என பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், நோவல் கொரோனா வைரஸ்-19 குறித்து வழங்கப்பட்ட தகவல்கள், இந்த முன்கணிப்புடன் ஒத்துப்போகவில்லை. சீன சுகாதார அதிகாரிகள், தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நோவல் கொரோனா வைரசின் தொடக்கத்தை அறிய முயற்சித்த வருகிறார்கள். வுஹான் மாகாணத்தில் உள்ள விலங்குகள் மற்றும் கடல் உணவுகள் விற்பனை சந்தையில் இருந்து வைரஸ் பரவி இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. மேலும், வௌவால் அல்லது பாம்புகள் மூலம் வைரஸ் பரவி இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். ஆக, வுஹான்-400 மனிதர்களை மட்டுமே தாக்கும் என்பது தவறான தகவல்.

உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, கொரோனா வைரஸ் என்பது மிகப்பெரிய வைரஸ் குடும்பம். இதற்கு முன்பாக மெர்ஸ் மற்றும் சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்பாக நோவல் கொரோனா வைரஸ் மனிதர்களிடையே அடையாளம் காணப்படவில்லை.

மேலும், நோவல் கொரோனா வைரஸ் மனித உடலுக்கு வெளியே காற்றில் 3 மணி நேரமும், பிளாஸ்டிக், உலோகங்கள் போன்றவற்றில் 3-4 நாட்கள் வரையில் உயிர் வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாவல் :

” ஓர் இளைஞர் ஒரு சிறு குழுவுடன் மலையேற்றத்திற்குச் செல்கிறார்கள். மலையேற்றத்திற்குச் சென்ற அனைவரும் இறந்து விட்டதாக தகவல் கிடைக்கிறது. அதை கேட்ட இளைஞரின் தாய் உடைந்து போகிறார். எனினும், சில நாட்களுக்கு பிறகு தன் மகன் இறக்வில்லை என்பதை அந்த தாய் உணர்கிறார்கள். பின் தன் மகனைத் தேடி செல்கிறார் ” என்பதே 1981-ம் ஆண்டு வெளியான நாவலின் கதை எனக் கூறப்படுகிறது.

1981-ம் ஆண்டு வெளியான ” The Eyes of Darkness ” எனும் கற்பனை நாவலின் முதல் பதிப்பில் உயிரி ஆயுதத்தை “வுஹான்-400″ பதிலாக ” கோர்கி-400 ” என்றே ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளார் என்பதை கூகுள் புக் மூலம் அறியலாம். கோர்கி என்பது ரஷ்ய நகரமாகும்.

உயிரி ஆயுதம் ரஷ்யாவில் இருந்தே தொடங்கியதாக கூண்ட்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். 1981-ம் ஆண்டு வெளியான பதிப்பில் கோர்கி-400 என்ற உயிரி ஆயுதம் ரஷ்யர்களால் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் 2008-ல் வெளியான பதிப்பில் “வுஹான்-400″ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

1981-ல் வெளியான ” The Eyes of Darkness ” நாவலில் சீனாவில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரசை முன்பே கணித்து உள்ளதாக கூறுவது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. அந்த நாவலின் ஆசிரியர் தான் கணித்தது போன்று நோவல் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறவில்லை. அந்த நாவலை வாசித்தவர்களே அதை மேற்கோள்காட்டி உலக அளவில் பரப்பி உள்ளர்கள். வுஹான் நகரத்தின் பெயரைத் தவிர நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரி ஆயுதத்திற்கும், நோவல் கொரோனா வைரசிற்கும் ஒற்றுமைகள் இல்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button