” நேர்மைக்கு கிடைத்த பரிசு ” – பள்ளி பாடத்தில் ஈரோடு சிறுவன் யாசின்.

பரவிய செய்தி
2-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற அரசு பள்ளி மாணவன் முகமது யாசின். சாலையோரம் கிடந்த 50,000 பணத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்த மாணவன் யாசினின் நேர்மையை பாராட்டி பள்ளி பாட புத்தகத்தில் எடுத்துக்காட்டு பாடமாக வைத்துள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் அப்ரூத்பேகம் ஆகியோரின் 7 வயது மகன் முகமது யாசின் சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த யாசின் சாலையில் பணக்கட்டு ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
500 ரூபாய் நோட்டுகள் 100 கொண்ட அந்த பணக்கட்டினை சிறுவன் யாசின் தனது பள்ளி தலைமையாசிரியரிடம் கொடுத்தார். அதன்பின், அந்த பணமானது சிறுவனின் மூலம் ஈரோடு எஸ்.பி சக்தி கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
50,000 பணத்தை ஒப்படைத்த சிறுவனின் நேர்மையைக் கண்டு வியந்த எஸ்.பி சக்தி கணேசன், சிறுவனுக்கு தேவையான பள்ளி சீருடை, புத்தகப்பை, காலணி உள்ளிட்டவையை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். சிறுவன் யாசினின் செயல் தமிழகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் சிறுவனின் குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார்.
” நேர்மைக்கு கிடைக்கும் பரிசு “
இந்நிலையில், புதிதாக வெளியாகி உள்ள 2-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சிறுவன் யாசினின் செயலை பாடமாக அச்சிட்டுள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. படிக்கும் மாணவர்கள் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்ற விளக்கத்தை அளிக்கும் வகையில், ஆத்திச்சூடியின் ” நேர்படஒழகு ” என்ற வரிகளுக்கு இந்த சம்பவத்தை படமாக அச்சிட்டு உள்ளனர்.
மேலும், சிறுவன் யாசின் எஸ்.பி சக்தி கணேசனை சந்தித்து பாராட்டு பெற்ற காட்சியும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்செய்தியை அறிந்த சிறுவன் யாசினின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
சிறுவனின் நேர்மைக்கு வாழ்த்துக்கள் !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.