75 வயதை கடந்ததால் கட்சி விதிப்படி எடியூரப்பா முதல்வராக வாய்ப்பில்லையா ?

பரவிய செய்தி
கட்சி விதிப்படி 75 வயதை எடியூரப்பா கடந்து விட்டதால் முதல்வராக பதவி ஏற்க முடியாது.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் 3 எம்.எல்.ஏக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்நிலையில், 105 எம்.எல்.ஏக்கள் என தனிப்பெரும்பான்மை உடன் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி அமைக்க இருக்கிறது. ஆனால், எடியூரப்பா முதல்வர் ஆவதில் சிக்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. காரணம், தற்பொழுது எடியூரப்பாவிற்கு 76 வயது ஆவதால் கட்சி விதிகளின் படி அவரால் முதல்வராக முடியாது, அக்கட்சியைச் சார்ந்த மற்றொரு நபரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பேசப்பட்டது.
இதன் அடிப்படையில் முகநூலில் பதிவிட்ட கிண்டல் பதிவுகள் ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றது. கர்நாடகாவின் பிஜேபி தலைவரான எடியூரப்பா முதல்வர் ஆவதில் வயது சிக்கல் இருப்பதாக பேசப்பட்டது உண்மையே. இதற்கு முன்பாக பிஜேபி கட்சியின் மூத்த தலைவரான அத்வானிக்கு 75 வயது ஆகிய பிறகு அவர் கட்சியின் அதிகம் முக்கியத்துவம் இல்லாத ” வழிகாட்டுதல் குழுவிற்கு ” அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், எடியூரப்பா விவகாரத்தில் அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் நிலையை மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு ஏற்படுத்தி தந்துள்ளார் எடியூரப்பா. கர்நாடகாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா போன்று கர்நாடக முழுவதிலும் பரவலாக ஆதரவு கொண்ட தலைவராக எடியூரப்பா இருக்கிறார். அவரைத் தவிர்த்து பிஜேபியில் வேறு தலைவர்கள் யாருமில்லை.
மேலும், கர்நாடகாவில் பெரும்பான்மை பிரிவினராக இருக்கும் லிங்காயத்துக்களின் ஆதரவு பிஜேபிக்கும், எடியூரப்பாவுக்கு உள்ளது. ஆகையால், அவருக்கு எதிரான கட்சி நிலைப்பாடு ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், எடியூரப்பா கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய கடிதத்தை ஆளுநர் வஜுபாய்-விடம் அளித்தார். அவர்களின் வேண்டுகோளை ஆளுநரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, இன்று(ஜூன் 26-ம் தேதி) மாலை 7 மணிக்கு கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.