ஏமன் நாட்டில் 8 வயது குழந்தை திருமணநாளன்று இரவில் மரணம் | தொடரும் குழந்தை திருமணம் .

பரவிய செய்தி
ஏமன் நாட்டில் 8 வயது குழந்தை திருமணநாளன்று இரவில் தன் 40 வயது உடைய கணவரின் கையாலேயே மரணம். குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
மதிப்பீடு
விளக்கம்
இஸ்லாமிய நாடான ஏமன் நாட்டில் 8 வயது உடைய குழந்தையை 40 வயது உடைய நபர் திருமணம் செய்து கொண்ட அன்றைய இரவில் குழந்தையுடன் பாலியல் உறவு கொண்ட பொழுது, குழந்தை இறந்ததாகக் கூறி குழந்தை மற்றும் ஒருவர் நபரின் புகைப்படம் தமிழக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த செய்தி குறித்த விரிவான தேடலில் புகைப்படங்களை வைத்து ஆராய்ந்த பொழுது 2016-ல் bbcnewsAfrica.blogspot என்ற வலைப்பதிவில் இறந்ததாகக் கூறப்படும் குழந்தை மற்றும் அவரின் கணவர் எனக் கூறுபவரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. எனினும், இந்த சம்பவம் 2016-ல் நிகழவில்லை.
8 வயது குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக 2013-ல் The Guardian மற்றும் CNN உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது. 2013 செப்டம்பர் 11-ம் தேதி The Guardian-ல் ” Yemeni child bride, eight, ‘dies on wedding night’ ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் குழந்தையின் இறப்பு சம்பவம் குறித்து விவரித்துள்ளனர்.
” வட மேற்கு ஏமனில் உள்ள hajjah மாகாணத்தில் இருக்கும் Meedi எனும் பகுதியில் 8 வயது சிறுமியை 40 வயது உடைய நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் நடந்த இரவில் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ததில் குழந்தைக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டார். உடனடியாக, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்தும் சென்றும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அதிகாரிகள் குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ” என Yemen’s House of Folklore உடைய தலைவர் அர்வா ஒத்மன் தெரிவித்து இருக்கிறார்.
அந்த மாகாணத்தில் உள்ள ஹராத் நகரின் பெயர் குறிப்பிடாத பாதுகாப்பு அதிகாரி, அப்படியான சம்பவம் நிகழவில்லை என மறுப்பு தெரிவித்து இருந்தார். 2013-ல் குழந்தையின் தந்தை நிகழ்ந்த சம்பவத்தை உண்மை இல்லை என பேசியதாகவும், இறந்ததாக கூறப்படும் குழந்தை உயிருடன் இருப்பதாகவும் ” Yemeni Father denies 8-year-old daughter was married and killed on wedding night ” என்ற வீடியோ youtube-ல் பகிர்ந்து இருந்தனர்.
ஆனால், Meedi பகுதியைச் சேர்ந்த இரு உள்ளூர் வாசிகள் குழந்தை தொடர்பான சம்பவத்தை உறுதிப்படுத்தி இருந்தனர். மேலும்,அங்குள்ள பழங்குடி இனத்தலைவர் குழந்தை தொடர்பான செய்தி வெளியாகக் கூடாது என உள்ளூர் பத்திரிகையாளர்களை மிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தனர்.
ஏமன் நாட்டில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கிறது. அங்கு இருக்கும் வறுமை சூழ்நிலையில் பெண்ணை வளர்த்த பிறகு திருமணம் செய்து வைக்கும் பொழுது அதிக அளவில் வரதட்சணை செலவிட வேண்டியதால் குழந்தையாக இருக்கும் பொழுதே வசதி படைத்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
ஐ.நா அறிக்கையின்படி, அந்நாடானது வறுமை நிலையில் இருப்பதாகவும், 24 மில்லியன் ஏமன் மக்களில் 10.5 மில்லியன் மக்களுக்கு உணவு பற்றாக்குறை மற்றும் 13 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதர வசதிகள் இல்லை எனத் தெரிவித்தன.
ஏமன் நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் Hooria Mashhour கூறுகையில், ஏமன் நாட்டில் குழந்தை திருமணம் நடைபெறுவது முதல் முறையல்ல. ஆகையால், நாம் இந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. ஒவ்வொரு ஆண்டிலும் ஏமன் நாட்டில் பல குழந்தை திருமணங்கள் நிகழ்கின்றன. அந்த வழக்கத்திற்கு முடிவு அளிக்கும் நேரம் இதுவே ” எனத் தெரிவித்து உள்ளனர்.
முடிவு :
ஏமன் நாட்டில் 8 வயது சிறுமியை 40 வயது நபர் திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததில் குழந்தை இறந்ததாக பரவிய செய்தி உண்மையே!. 2013-ம் ஆண்டில் இச்சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த கொடூரத்தை செய்த நபரின் மீதும், பெற்றோரின் மீதும் சட்டம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏமன் நாட்டில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைக்கின்றனர். இந்த வழக்கம் மாற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றனர். 18 வயதுக்குட்பட்ட காலத்தில் பெண்கள் படிக்க வேண்டிய வயது திருமணத்திற்கான வயதில்லை என மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Updated :
ஏமன் நாட்டில் 8 வயது சிறுமியை 40 வயது நபர் திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்து குழந்தை இறந்ததாக பரவிய செய்தியில் இருக்கும் புகைப்படங்கள் குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. அப்படங்கள் 2016-ம் ஆண்டில் இருந்தே பரவத் துவங்கின. 2013-ம் ஆண்டில் வெளியான செய்திகளில் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் காரணமான நபரின் புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதுமட்டுமின்றி, ஏமன் குழந்தை இறந்த செய்தியுடன் குழந்தை திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் என மேற்கண்ட படங்கள் தவறாக பகிரப்பட்டன. இப்படமானது 2016-ல் துருக்கியில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.
ஆதாரம்
8-Year-Old Yemeni Child Dies at Hands of 40-Year-Old Husband on Wedding Night
Yemeni child bride, eight, ‘dies on wedding night’
https://edition.cnn.com/2013/09/15/world/meast/yemen-child-bride/index.html?no-st=9999999999
Child bride in Yemen dies of internal bleeding on wedding night: activist
The Top 15 Fake News Stories on the Migrant Crisis and Muslims