யோகி ஆதித்யநாத் பெற்றோரை இழந்த சிறுமியின் முழு பொறுப்பையும் ஏற்றதாக பரவும் கதை.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் பனாரஸ் பகுதியில் ஓர் இரவில் அரசு யாத்திரை சென்ற நேரத்தில் தாய், தந்தையர் என எந்தவொரு ஆதரவும் இல்லாத சிறுமி சாலையோரத்தில் அழுது கொண்டு இருப்பதை கண்டு அந்த சிறுமிக்கு உணவு, இருப்பிடம், கல்வி என அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாக ஓர் நிலைத்தகவல் உடன் யோகி ஆதித்யநாத் குழந்தையிடம் பேசுவது போன்று இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஜூலை 6-ம் தேதி பியூஸ் சிங் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், யோகி ஆதித்யநாத் குழந்தை அருகே இருக்கும் அதே புகைப்படம் மற்றும் அதே தகவலை பகிர்ந்து இருந்தார். ஆனால், யோகி ஆதித்யநாத் குழந்தையை சந்தித்தது காசி என்றும், சிறுமி என்பதற்கு பதிலாக சிறுவன் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த முரண்பட்ட தகவலால் பரப்பப்படும் புகைப்படம் மற்றும் தகவல் குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
யோகி ஆதித்யநாத் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” முதல்வர் யோகி வந்தாங்கியா குழந்தைகள் உடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதாக ” 2019-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி லைவ் ஹிந்துஸ்தான் எனும் செய்தியில் இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
உ.பியின் பழங்குடியினரான வந்தாங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தீபாவளி கொண்டாட முதலமைச்சர் கோரக்பூருக்கு வந்ததாக லைவ் ஹிந்துஸ்தான் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 2019 அக்டோபர் 28-ம் தேதி வெளியான up.punjabkesari.in எனும் இணையதள செய்தியில் அதே குழந்தையுடன் யோகி ஆதித்யநாத் இருக்கும் மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
வைரல் செய்யப்படும் பதிவுகளில் உள்ளது போன்று, புகைப்படத்தில் இருப்பது பெற்றோரை இழந்த குழந்தை என்றோ, குழந்தைக்கான செலவுகளை முதல்வர் யோகி ஏற்றுக் கொண்டதாகவோ மற்றும் அந்த குழந்தை குறித்த எந்த தகவலும் 2019-ல் வெளியான செய்திகளில் இடம்பெறவில்லை.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நலஉதவி அளிக்கும் திட்டத்தை யோகி ஆதித்யநாத் அரசு தங்கள் மாநிலத்தில் அறிமுகப்படுத்திய செய்தியே கிடைக்கிறது. மற்றபடி, சமீபத்தில் யோகி ஆதித்யநாத் பற்றி பரவும் கதை தொடர்பாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பனாரஸில் தாய், தந்தையர் என யாரும் இல்லாமல் இருந்த சிறுமிக்கு உணவு, இருப்பிடம், கல்வி என தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்ததாக பரவும் தகவல் தவறானது. அதனுடன் பரப்பப்படும் குழந்தையின் புகைப்படம் 2019-ல் யோகி ஆதித்யநாத் வந்தாங்கியா சமூக மக்களுடன் தீபாவளி கொண்டாடிய போது எடுக்கப்பட்டது என முடிகிறது.