எங்கள் அரசு வீழ்ந்தால் நாட்டைக் கொளுத்துவோம் என பேசினாரா யோகி ஆதித்யநாத் ?

பரவிய செய்தி
ஒரு வேளை எங்களது அரசு வீழ்ந்து விட்டால் ! நாடு முழுவதையும் தீ இட்டு கொளுத்தி விடுவோம். கான்பூரில் யோகி ஆதித்யநாத் பேச்சு.
மதிப்பீடு
விளக்கம்
2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியின் எம்.பிக்கள், மாநில தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி மக்களால் விமர்சனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தேர்தலில் பிஜேபி அரசு தோல்வியை தழுவினால் நாட்டையே கொளுத்தி விடுவோம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் பேசி உள்ளதாக செய்தி சேனலில் இடம் பெற்று இருப்பது போன்று ஓர் படம் வைரல் ஆகியது.
ஹிந்தி வார்த்தைகள் மொழிப் பெயர்க்கப்பட்டு தமிழில் மீம் பதிவுகள் பதிவிடப்பட்டன. இதை விட, வட மாநிலங்களில் இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வர் இதுபோன்ற கருத்தை கூறி இருக்க வாய்ப்பில்லை என்று ஒற்றை வரியில் கூறிவிடலாம்.
எனினும், ஆதாரம் கேட்கும் சிலருக்கான விளக்கத்தை அளிப்போம். யோகி ஆதித்யநாத் பற்றிய செய்தி இடம்பெற்று இருக்கும் சேனலில் எம் நியூஸ் என்ற லோகோ உள்ளது. அது குஜராத்தைச் சேர்ந்த ” Mantavya News ” சேனல் உடையது.
ஹிந்தி பேசப்பட்டாலும் குஜராத்தைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஏன் ஹிந்தி மொழியில் செய்தி வெளியிட வேண்டும். அடுத்து, சேனலில் இருக்கும் செய்தி டிவி முழுவதையும் நிரப்பி உள்ளது. எந்தவொரு செய்தி நிறுவனமும் இவ்வாறான முறையில் செய்திகளை வெளியிட மாட்டார்கள்.
” Mantavya News ” சேனலில் வெளியிடப்படும் முக்கிய செய்திகள் மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போன்றே வெளியிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து, யோகி ஆதித்யநாத்தின் பேச்சு எனக் கூறும் பதிவில் இருக்கும் வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், எந்தவொரு பிரபல செய்திகளிலும் இதைப் பற்றிய செய்திகள் ஏதுமில்லை.
” Mantavya News ” சேனலின் லோகோ உடன் தவறான செய்தியை ஃபோட்டோஷாப் செய்து பரப்பியதை தமிழிலும் தவறாக பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் செய்தி சேனல்களின் பெயரில் ஃபோட்டோஷாப் செய்திகள் அதிகம் வெளியாவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.