யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகும் அடிபம்பில் தண்ணீர் குடிப்பதாகப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
13/04/2023 வியாழன்:~ பிஸ்லேரி பாட்டில் கேட்டு தாகம் தீர்க்கும் பல முதல்வர்களைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் அப்படிப்பட்ட முதல்வரைப் பார்த்ததில்லை. தாகம் தீர்க்க யோகி ஆதித்யநாத், இப்படி ஒரு முதலமைச்சரை கைப்பம்பில் பார்த்ததுண்டா, பார்க்கவில்லை என்றால் முடிந்தவரை பகிருங்கள். அதனால்தான் இன்று நாட்டின் எல்லா மாநிலங்களிலும் யோகி போன்ற முதல்வர் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது!!
மதிப்பீடு
விளக்கம்
யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகும் அடிபம்பு குழாயில் தண்ணீர் குடிப்பதாகப் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பாஜக கட்சியினர் பலரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
13/04/2023 வியாழன்,
பிஸ்லேரி பாட்டில் கேட்டு தாகம் தீர்க்கும் பல முதல்வர்களைப் பார்த்திருப்பீர்கள்,ஆனால் அப்படிப்பட்ட முதல்வரைப் பார்த்ததில்லை.தாகம் தீர்க்க யோகி ஆதித்யநாத்,இப்படி ஒரு முதலமைச்சரை கைப்பம்பில் பார்த்ததுண்டா, பார்க்கவில்லை என்றால் முடிந்தவரை பகிருங்கள். pic.twitter.com/CAEtf5Xu7j— BJP4Muthiyalpet & Puducherry,Srinivasa Guptaa (@GuptaaMaiyappan) April 16, 2023
மேலும் அந்தப் பதிவுகளில் 2023 ஏப்ரல் 13 அன்று நடந்ததாகத் தேதிக் குறிப்பிடப்பட்டு “பிஸ்லேரி பாட்டில் கேட்டு தாகம் தீர்க்கும் பல முதல்வர்களைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் அப்படிப்பட்ட முதல்வரைப் பார்த்ததில்லை. தாகம் தீர்க்க யோகி ஆதித்யநாத், இப்படி ஒரு முதலமைச்சரைக் கைப்பம்பில் பார்த்ததுண்டா, பார்க்கவில்லை என்றால் முடிந்தவரை பகிருங்கள். அதனால்தான் இன்று நாட்டின் எல்லா மாநிலங்களிலும் யோகி போன்ற முதல்வர் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது!” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
2017ல் உபி மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, 2017 மார்ச் 26 அன்று உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் இரண்டாவது முறையாக (2022) முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
பரவி வரும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்கையில், அந்தப் புகைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது எடுத்தது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
गोरखपुर के सांसद और भावी मुख्यमंत्री (उप्र) योगी आदित्यनाथ जी, सादगी का एक उदाहरण—-फोटो साभार हरगोविन्द प्रवाह जी pic.twitter.com/YJkXjOzgJ3
— Ramesh Bhise (@BhiseRamesh) April 25, 2016
இப்புகைப்படம் 2016 ஏப்ரல் 25 அன்று Ramesh Bhise என்ற ட்விட்டர் பக்கத்திலும், 2016 ஏப்ரல் 25 அன்று स्वर्णिम हिंद का स्वर्णिम स्वप्न என்பவரின் முகநூல் பக்கத்திலும் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் எம்.பியாக இருந்தபோது பகிரப்பட்டுள்ளது. அப்பதிவுகளில் தெளிவாக “கோரக்பூர் எம்.பி மற்றும் வருங்கால முதல்வரான (உ.பி) யோகி ஆதித்யநாத் ஜி, எளிமைக்கு உதாரணம். புகைப்பட உபயம் ஹர்கோவிந்த் பிரவா ஜி” என்று ஹிந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வு செய்கையில் யோகி ஆதித்யநாத் 2017 ஆம் ஆண்டு உ.பி.யின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஒரு கூட்டத்தில் அனைவருக்கும் ‘பிஸ்லேரி’ தண்ணீர் கொடுத்தபோது அவருக்கு மட்டும் ‘ஹிமாலயன்’ தண்ணீர்’ பரிமாறப்பட்ட ஒரு படமும் சமூக ஊடகங்களில் அப்போது வைரலாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் Financial Express வலைப்பக்கத்தில் 2017 மார்ச் 31 அன்று செய்தியாக வெளிவந்துள்ளது.
Kanpur: CM Yogi Adityanath held a meeting to review the storm affected regions of Kanpur and Kanpur Dehat (05.05.2018) pic.twitter.com/160R5mYefb
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 5, 2018
2018 ஜூலை மாதம் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் வழங்கப்பட்டது. எனினும், 2018 அக்டோபரில் அமித்ஷா உடனான சந்திப்பில் ஹிமாலயன் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
முடிவு:
நம் தேடலில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிபம்பில் தண்ணீர் குடிப்பதாகப் பரவும் புகைப்படம் அவர் முதல்வராவதற்கு முன் 2016ல் எம்பியாக இருந்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.