ஒவைசியை பேசவிடாமல் மௌனமாக்கி உட்கார வைத்த யோகி என பாஜகவினர் பரப்பும் எடிட் செய்த வீடியோ !

பரவிய செய்தி
யோகி ஜி அவர்களின் இதுதான் தரமான வீடியோ பார்த்தால் உங்களுக்கே தெரியும்…
குறிப்பு: ஓவைசி
மதிப்பீடு
விளக்கம்
யோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது தனது உரையை இடைமறித்த AIMIM கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைசியை பேசவிடாமல் மௌனமாக்கி உட்கார வைத்ததாக வீடியோ ஒன்று பாஜக கட்சியினரால் தற்போது வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்தப் பதிவுகளில் “யோகிஜி அவர்களின் தரமான வீடியோ இதுதான்” என்பது போன்றும் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் யோகி ஆதித்யநாத் பேசும் போது ஒவைசி எழுந்து நின்று டைரி குறிப்போடு பேச முயல்வதும், உடனே அவரை பேசவிடாமல் யோகி ஆதித்யநாத் தடுத்து உட்கார வைப்பதும், “ஹிந்து என்று சொல்வதில் பெருமை கொள் என்றார் சுவாமி விவேகானந்தர்” என்று கடுமையாக பேசி உரையை மீண்டும் அவர் தொடங்குவதுமாகவும் வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.
உண்மை என்ன ?
பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், இந்த வீடியோ 2014 ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற மக்களவை அமர்வின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. மேலும் இந்த மக்களவை விவாதத்தின் வீடியோவை பாஜக தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான Bharatiya Janata Party தளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ‘வகுப்பு வன்முறையைச் சமாளிக்க மிகவும் பயனுள்ள வழிமுறைகள் தேவை‘ (Need for more effective mechanism to deal with communal violence) என்ற தலைப்பில் மக்களவையில் விவாதம் தொடங்குகிறது. அந்த விவாதத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் சரமாரியாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்கின்றனர்.
பின்னர் வீடியோவின் 10:24 நிமிடங்களில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவர் அவரது பேச்சை இடைமறித்தபோது, யோகி ஆதித்யநாத் அவரது குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று கூறி உட்காரும்படி கூறுகிறார். அதைத் தொடர்ந்து “ஹிந்து என்று சொல்வதில் பெருமை கொள் என்றார் சுவாமி விவேகானந்தர்” என்று தனது உரையை மீண்டும் அவர் தொடர்வதாக வீடியோ காட்சிகள் உள்ளன.
அதே வீடியோவின் 13:24 நிமிடங்களில், AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யோகி ஆதித்யநாத்தின் உரையைக் குறுக்கிட்டு, வகுப்புவாத கலவரங்கள் குறித்து அவர் மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்கள் தவறானது என்று விளக்குவதைக் காணலாம். பின்னர் வீடியோவின் 14:02 நிமிடங்களில், அப்போதிருந்த மக்களவை துணை சபாநாயகர் எம் தம்பிதுரை, ஒவைசியை அமரச் சொன்னபோது ஒவைசி தனது இருக்கையில் அமர்வதாக உள்ளது.
இதிலிருந்து 2014 ஆகஸ்ட் 13 ஆகஸ்ட் அன்று நடைபெற்ற மக்களவை அமர்வின் இரண்டு வெவ்வேறு பகுதியை ஒரே நிகழ்வாக எடிட் செய்யப்பட்டது தெரிகிறது. மேலும் அன்று நடைபெற்ற லோக்சபா விவாதத்தின் வகுப்புவாத கலவரங்கள் குறித்து பல செய்திகள் Firstpost மற்றும் Economictimes இணையதளங்களில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளன.
முடிவு:
நம் தேடலில், யோகி ஆதித்யநாத் பாராளுமன்றத்தில் தனது உரையை இடைமறித்த அசாதுதீன் ஒவைசிக்கு எதிராகப் பேசி உட்கார வைத்ததாகப் பரவிவரும் வீடியோ உண்மையானது அல்ல. அது 2014ல் நடைபெற்ற லோக்சபா அமர்வின் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளை ஒரே நிகழ்வுகளாகத் திரித்துப் பரப்பப்பட்ட எடிட் செய்த வீடியோ என்று அறிய முடிகிறது.