உபி-யில் கலவரமே நடைபெறவில்லை என யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பேசும் பொய்

பரவிய செய்தி

உத்திர பிரதேச முதலமைச்சராக நான் பதவியேற்ற கடந்த 5 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை – உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

மதிப்பீடு

விளக்கம்

கடந்த செப்டம்பர் 4ம் தேதியன்று உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிஜ்னூர் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளை மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி உத்தர பிரதேச மாநிலம் குற்றங்கள் இல்லாத மாநிலமாகக் மாறியுள்ளது, தான் ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் நமது மாநிலத்தில் எந்த கலவரமும்  நடைபெறவில்லை என கூறியிருந்தார். 

உண்மை என்ன ?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேச மாநிலத்தில் 35,040 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. கலவரம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேச மாநிலத்தில் குறைந்துள்ளது. ஆனால் கலவரங்களே நடைபெறவில்லை என்பது உண்மையல்ல. 

2021ம் ஆண்டு மட்டும் உத்திர பிரதேச மாநிலத்தில் 5,302 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. இக்கலவரங்களில் 5,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கலவரங்களை 15 தலைப்புகளில் வகைப்படுத்தியுள்ளது. அவற்றில் முன்பகை காரணமாக வரக்கூடிய கலவரங்களை தவிர்த்து மற்ற வகைகளில் வழக்கு பதிவுகள் குறைந்துள்ளன. 

உத்திர பிரதேசம் கலவரங்கள் நடைபெறாத மாநிலம் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசி இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யோகி ஆத்தியநாத் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், மார்ச் மாதத்துடன் தனது தலைமையிலான  இரண்டு ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதாகவும், இதுவரையில் எந்த கலவரமும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டார். 

இதே போன்று 2021, மார்ச் 19ம் தேதியன்று தனது 4 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித வகுப்புவாத கலவரமும் நடைபெறவில்லை என்ற கூற்றினை முன்வைத்தார். 2022ம் ஆண்டு உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி 3ம் தேதி இதே கருத்தினை முன்வைத்து பேசியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் 2019 முதல் இதே கருத்தை பேசி வருகிறார். ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் குறிப்பிடுவதோ வேறு விதமாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் உத்திர பிரதேசத்தில் 35,040 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன.  கடந்த 3 ஆண்டுகளில் தலித் மக்களின் மீதான தாக்குதலும் உத்திர பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலேயே அதிகப்படியாக உத்திர பிரதேசத்தில் 13,146 வன்கொடுமைகள் தலித் மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் நாட்டிலேயே அதிகப்படியாக 210 தலித்துகள் உபி-யில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க : பட்டியலின மக்கள் மீதான தாக்குதலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் : 2021 என்.சி.ஆர்.பி அறிக்கை

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின்படி அதிகப்படியாக கலவரம் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் உத்திர பிரதேசம் (5302 வழக்குகள்) மூன்றாம் இடத்திலுள்ளது. உண்மை புள்ளி விவரம் இவ்வாராக இருக்க, கடந்த 5 ஆண்டுகளில் உபி குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என்றும், கலவங்கள் நடைபெறவில்லை என்றும் யோகி அதித்யநாத் பேசி இருப்பது தவறான தகவலாகும்.

முடிவு :

நம் தேடலில், கடந்த 5 ஆண்டுகளில் உத்திர பிரதேச மாநிலத்தில் எந்த கலவரமும் நடைபெறவில்லை என யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது தவறானது என்பது தெரிய வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உத்திர பிரதேச மாநிலத்தில் 35,040 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின்படி அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader