அலகாபாத்தில் திருமணங்களுக்கு தடை விதித்த யோகி அரசு : காரணம் என்ன ?

பரவிய செய்தி
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் திருமணங்களுக்கு, சடங்குகளுக்கு தடை விதித்த யோகி ஆதித்யநாத் அரசு.
மதிப்பீடு
சுருக்கம்
அடுத்த வருடம் அலகாபாத்தில் நடக்க உள்ள “ மஹா கும்பமேளா 2019 “ விழாவின் புனித நீராடல் நாட்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை கருத்தில் கொண்டு திருமணம் மற்றும் சடங்குகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை பிறப்பித்துள்ளது.
விளக்கம்
பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆளும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என அதிகாரப்பூர்வமாக மாற்றினார். தற்போது அந்நகரில் திருமணங்களுக்கு தடை விதித்து உள்ளதாக செய்திகள் வெளியாவதை பார்க்க முடிந்தது.
மஹா கும்பமேளா 2019 :
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜ்(அலகாபாத்) நகரில் அடுத்த வருடம் மஹா கும்பமேளா நடைபெற உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையில் மஹா கும்பமேளாவின் புனித நீராடல் நடைபெறுவதால் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் வெளியிட அரசு ஆணையில், “ சாஹி-சனன் நாட்களான ஜனவரி 15 மற்றும் 21 , பிப்ரவரி 4, 10 மற்றும் 19, மார்ச் 4-க்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களுக்கும் தடை உத்தரவு பொருந்தும். சாஹி-சனன் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து பெருமளவில் பக்தர்கள் புனித நீராடல் செய்ய வருவதால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்துள்ளனர் .
இத்தகைய தடை உத்தரவானது திருமணம், சடங்கு, நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் திருமண மண்டபங்கள், விருந்தினர் மாளிகைகள், சடங்குகளுக்கான அரங்குகள் போன்றவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம், பல மாதங்களுக்கு முன்பே தடை விதிக்கப்பட்ட தேதிகளில் திருமணம் மற்றும் சடங்குகளுக்கு மண்டபங்களை முன்பதிவு செய்து இருப்பர். தன் மகளுக்கு பிப்ரவரி 9-ம் தேதி திருமண மண்டப முன்பதிவு மற்றும் ஏற்பாடுகள் செய்த தாய் முன்பதிவு தொகையை திருப்பி அளிக்கப்பட்டு குறித்து வேதனையை தெரிவித்து உள்ளார். அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என மக்களும், சில அமைப்புகளும் கோரிக்கை வைக்கின்றனர்.
” நாடு முழுவதிலும் இருந்து வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை கருத்தில் கொண்டு சாஹி சனன் நாட்களுக்கு முன்பும், பின்பும் மண்டபங்கள் மற்றும் அரங்குகளை முன்பதிவு செய்ய வேண்டாம் என்ற ஆணையை மாவட்ட கூடுதல் குற்றவியல் நடுவர் வாசித்ததாக செய்தியில் வெளியாகி உள்ளது ”
ஆனால், தமிழ் உள்ளிட்ட பிற மொழி ஊடகங்களில் மூன்று மாதங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழா நடைபெறும் நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
அம்மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், விருந்தினர் மாளிகைகள், அரங்குகள் உத்தரவு பற்றி மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், இந்த உத்தரவால் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் தடைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் – ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணம் என்பதால் ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றாலும் பல மாதங்களுக்கு முன்பே திருமண மற்றும் சடங்குகளுக்கு முன்பதிவு மற்றும் ஏற்பாடுகள் செய்தவர்களின் நிலை கேள்விக்குறியே
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
Kumbh 2019: No weddings allowed during main snan days in Prayagraj