உயிரிழந்த ராணுவ வீரரின் சாம்பலை யோகி ஆதித்யநாத் நெற்றியில் பூசுவதாக பரவும் பொய் !

பரவிய செய்தி
வீர மரணம் அடைந்த நமது இந்திய ராணுவ வீரரின் சாம்பலை, தனது நெற்றியில் பூசி கொள்ளும் யோகிஜி.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சாம்பலை எடுத்து நெற்றியில் பூசுவதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து அறிய கீவார்த்தைகளை பயன்படுத்தி தேடுகையில், மார்ச் 22-ம் தேதி பகவ கிராந்தி சேனாவின் தேசியத் தலைவர் டாக்டர் பிராச்சி சாத்வி தன் ட்விட்டர் பக்கத்தில், ” ஹோலிகாவின் சாம்பலை திலகமாகப் பூசும் பழமையான பாரம்பரியம் ” எனக் குறிப்பிட்டு இதே வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
हमारे सनातन की परंम्परा है होलिका की राख ठंढी होने के बाद उसे माथे पे लगाते हैं 🙏🚩 @myogiadityanath जी pic.twitter.com/G8gldCeTHl
— Dr. Prachi Sadhvi (@Sadhvi_prachi) March 22, 2022
உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்ற பிறகு, மார்ச் 19-ம் தேதி தனது தொகுதியான கோரக்பூரில் மக்களுடன் இணைந்து யோகி ஆதித்யநாத் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார். கோரக்பூர் கோவிலில் ஹோலி பண்டிகையின் போது ஹோலிகாவின் சாம்பலை நெற்றியில் திலகமாக பூசுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
नव-विहान, उल्लास एवं आनंद के महापर्व होली के शुभ अवसर पर आज श्री @GorakhnathMndr परिसर में होली मिलन… pic.twitter.com/RRVKe1L8NP
— Yogi Adityanath (@myogiadityanath) March 19, 2022
மார்ச் 19-ம் தேதி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ யோகி ஆதித்யநாத் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. வைரல் வீடியோவில் மஞ்சள் நிற உடையில் தென்பட்ட நபர், யோகி ஆதித்யநாத் கோரக்பூர் கோவிலில் இருக்கும் போதும் எடுக்கப்பட்ட வீடியோவிலும் இருப்பதை காண முடிந்தது.
முடிவு :
நம் தேடலில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வதாக பரவும் தகவல் பொய்யானது. அந்த வீடியோ கோரக்பூர் கோவிலில் ஹோலி பண்டிகையின் போது ஹோலிகாவின் சாம்பலை நெற்றியில் திலகமாக பூசும் பாரம்பரியமான செயல் என அறிய முடிகிறது.