This article is from Feb 01, 2020

இருசக்கர வாகனத்தில் மது கடத்திய பெண் விசிக-வைச் சேர்ந்தவரா ?

பரவிய செய்தி

“விசிக” கட்சி மகளிர் அணி செயலாளர் “அனுசுயா” பாண்டிசேரில இருந்து கடலூருக்கு “புரட்சிப்பயணம்” மேற்கொண்டபோது. 

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

ஊடகங்களில், சமூக வலைதளங்களில் ஆளும் அரசிற்கு ஆதரவு நிலையில் பேசி வரும் கிஷோர் கே சாமி என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் விசிக மகளிர் அணி செயலாளர் அனுசுயா பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த பொழுது கைது செய்யப்பட்டு உள்ளதாக புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார்.

இப்பதிவு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று முகநூலில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த பதிவை காப்பி செய்து பல முகநூல் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆகையால், வைரலாகி வரும் செய்தி குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

ஜனவரி 10-ம் தேதி தினமலரில் வெளியான செய்தியில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு கைது செய்துள்ளனர். அதில், ஏழுமலை என்பவரின் மனைவி அனுசியாவை (50) கைது செய்ததோடு 35 மதுபாட்டில்கள்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், இந்த செய்தியில் புகைப்படமில்லை, கைது செய்யப்பட்டவர் 50 வயது ஆனவர், மது பாட்டில்கள் வாகனத்தில் பறிமுதல் செய்யப்படவில்லை. பெயர் மட்டுமே ஒன்றாக இருக்கிறது.

இதையடுத்து மேற்கொண்டு தேடிய பொழுது,  2018-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி மாலைமலர் செய்தியில் புதுவையில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்களை கடத்திய இளம்பெண் குறித்த செய்தி வெளியாகியதை பார்க்க முடிந்தது.

அதில், ” புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதுவையில் இருந்து கடலூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணிடம் 120 லிட்டர் சாராயமும், 100 மது பாட்டில்களும் இருந்தது. அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் முதுநகர் வசந்தராயபாளையம் பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்பவரின் மனைவி அனுசுயா (24) என்பது தெரியவந்தது. புதுவையில் இருந்து மது கடத்தி தனது கணவரின் உதவியுடன் விற்பனை செய்து வந்த அனுசுயாவை போலீசார் கைது செய்தனர். அவரின் கணவர் லெனின் குமாரைத் தேடி வருகின்றனர் ” என வெளியாகி இருக்கிறது.

தற்பொழுது புகைப்படத்துடன் பரப்பப்படும் பெண் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்திகளில் வெளியாகி இருக்கிறது. எனினும், பெண்ணின் புகைப்படம் வெளியாகவில்லை. அது குறித்து தேடிய பொழுது, 2018  ஜனவரி 23-ம் தேதி asianet இணையதளத்தில் அதே செய்தியுடன் தற்பொழுது வைரலாகும் பெண்ணின் புகைப்படமும் வெளியாகி இருந்தது.

பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்திய பெண் குறித்து மாலைமலர், நக்கீரன் உள்ளிட்ட பல தமிழ் செய்திகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்கிறது. வெளியான செய்திகளில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த பெண் என எங்கும் குறிப்பிடவில்லை. எந்த கட்சியைச் சேர்ந்தர் என்றும் குறிப்பிடவில்லை.

Facebook link | archived link 

மாறாக, அந்த பெண் கைது செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டு விசிக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என மாற்றி மாற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Twitter link | archived link 

இதேபோல், 2018-ல் மது பாட்டில்களை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வைத்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் மகளிர் அணி செயலாளர் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்திய அனுசுயா என்ற பெண் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி செயலாளர் என ஆதாரமில்லாத தகவலை பரப்பி உள்ளார் கிஷோர் கே சாமி. ஒரே படத்தை வைத்துக் கொண்டு வெவ்வேறு கட்சிகளின் மகளிர் அணி செயலாளர் என இரண்டு ஆண்டுகளாகவே தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader