இளைஞர்களை அரசியலுக்கு வரவேண்டாம் என வெங்கையா நாயுடு பேசியதாக வெளியான தவறான செய்தி !

பரவிய செய்தி
இளைஞர்களுக்கு வெங்கையா நாயுடு அட்வைஸ். “அரசியல் ஆரோக்கியமானது இல்லை, இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” சென்னையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு.
மதிப்பீடு
விளக்கம்
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசியதாக சன் செய்தி நியூஸ் கார்டு ஒன்று வெளியிட்டுள்ளது.
அரசியல் ஆரோக்கியமானது இல்லை… இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்…
– வெங்கையா நாயுடு
— Devendran Palanisamy (@devpromoth) March 11, 2023
உண்மை என்ன ?
சேப்பியன் ஹெல்த் எனும் தனியார் அறக்கட்டளையின் 25வது ஆண்டு விழா சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
Honoured to be at the Silver Jubilee celebrations of Sapiens Health Foundation, along with my friend, superstar Rajinikanth. Pleased to launch the Foundation’s initiative, “Decrease salt, Increase life.” pic.twitter.com/XuxY44yeRH
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 11, 2023
இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ ‘தந்தி டிவி’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், 1 மணி நேரம் 30 நிமிடத்தில் வெங்கையா நாயுடு பேசுகையில், “நடிகர் ரஜினி அரசியலுக்கு வர இருக்கிறார் என்பதைக் குருமூர்த்தி மூலமாகத் தெரிந்து கொண்டேன். அவர் அரசியலுக்கு வர வேண்டாமென எனது சார்பில் அறிவுரை கூறுங்கள் என்று குருமூர்த்தியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ரஜினிகாந்த் மக்களுக்குச் சேவை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளார் எனக் கூறினார். மக்களுக்குச் சேவை செய்ய இதைவிடச் சிறந்த வழிகள் இருக்கிறது என நான் பதிலளித்தேன்.
எனது அனுபவத்திலிருந்து இதனைக் கூறுகிறேன். ஏனெனில் ரஜினிகாந்த் அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். இது நல்லதல்ல என்று அவரையே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கூறிவிட்டேன்.
கொரோனா தாக்கத்தின் காரணமாக அவர் அரசியலுக்கு வரவில்லை. முன்பே அவர் சொன்னது போல கொரோனாவிற்கு நன்றி. ஏனெனில், அரசியல் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அரசியலில் இணையாதீர்கள்.
இப்படிச் சொல்வதினால் அரசியலில் இணைபவர்களின் ஆர்வத்தைக் குறைக்கிறேன் என நினைக்க வேண்டாம். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலில் இணைய வேண்டும். ஆனால், அவர்கள் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். பின்னர் சித்தாந்தத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதன் பிறகு மட்டுமே அவர்கள் அரசியலைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது இளைஞர்களுக்கு எனது அறிவுரை” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் அவரது உரையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : பால் அண்டத்தில் ஓம் என்ற ஒலி இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது என குடியரசுத் துணைத்தலைவர் பேசினாரா ?
இதேபோல், தற்போதைய குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ‘ஓம்’ என்ற ஒலி பால்வெளி அண்டத்தில் கேட்கிறது என நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் உண்மைத்தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டது.
முடிவு :
நம் தேடலில், இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசவில்லை. ஒழுக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் அவர் கூறியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.