கோயம்புத்தூர், கொல்கத்தா, பாட்னா பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களா ?

பரவிய செய்தி
கோயம்புத்தூர், கொல்கத்தா, பாட்னா ஜீரோ பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் மற்றும் இந்தியாவில் பெண்களுக்க பாதுகாப்பான நகரங்கள்.
மதிப்பீடு
சுருக்கம்
கோயம்புத்தூர், கொல்கத்தா, பாட்னா உள்ள பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பற்றி மட்டுமே குறிப்பிட்டு உள்ளார்கள், பாலியல் பலாத்கார வழக்குகள், பெண்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து விரிவாக பார்ப்போம்.
விளக்கம்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறை தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதை பார்க்கும்போது, பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் எது என்கிற எண்ணமும் தோன்றும்.
ட்ரோல் சினிமா எனும் முகநூல் பக்கத்தில், கோயம்புத்தூர், கொல்கத்தா, பாட்னா ஆகிய 3 நகரங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளே நிகழவில்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் என்றும் மீம் வெளியிட்டு இருந்தனர். இதன் உண்மைத்தன்மை என்னவென்று அறிய தீர்மானித்து தரவுகளை தேடிப் பார்த்தோம்.
உண்மை என்ன ?
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் NCRB தரவுகளின் அடிப்படையில், ” நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்கள், நகரங்கள் எது என அறிந்து கொள்ள முடியும். அதேபோல், குறைவான குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவும் நகரங்கள் எது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
அக்டோபர் 7-ம் தேதி இந்தியா டைம்ஸ் எனும் இணையதளத்தில், ” Zero Cases Of Sexual Harassment, Kolkata Safest City For Women; Coimbatore & Patna Among Safest ” எனும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையின் உள்ளே குறைவான பாலியல் தாக்குதல்கள் கொண்ட நகரங்கள் எனக் குறிப்பிட்டு உள்ளனர். பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமின்றி பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் தாக்குதல்கள் குறித்தும் பார்க்க வேண்டி உள்ளது.
2019 NCRB தரவுகளில், இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த 19 பெருநகரங்களில் தமிழகத்தில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரு நகரங்கள் இடம்பெற்று உள்ளன. 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குறைவான குற்றச் சம்பவங்களைக் கொண்ட பெருநகரங்களாக கொல்கத்தா, கோயம்புத்தூர், பாட்னா உள்ளிட்டவை உள்ளன.
2019-ல் கோயம்புத்தூர், பாட்னா உள்ளிட்டவையில் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பூஜ்ஜியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 59 வழக்குகள் பதிவாகி இருப்பதாக NCRB அட்டவணையில் இடம்பெற்று இருக்கிறது. கொல்கத்தாவில் வேலை மற்றும் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மட்டுமே பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் பூஜ்ஜியம் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. பிற பகுதிகளில் 59 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. அடுத்ததாக, பாலியல் பலாத்கார முயற்சி ஆனது மூன்று பெருநகரங்களுக்கும் பூஜ்ஜியம் எனக் குறிப்பிட்டு உள்ளார்கள்.
குறிப்பிட்ட 3 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் பலாத்காரம், போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி காண்பித்து உள்ளோம்.
கோயம்புத்தூரில்(1), கொல்கத்தா(14), பாட்னா(13) என பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதைக் கணக்கில் எடுக்கவில்லை. பாலியல் பலாத்கார வழக்குகளில் இம்மூன்று நகரங்களும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. அதிக பாலியல் பலாத்கார வழக்குகளைக் கொண்ட பெருநகரமான டெல்லி(1231) உள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2019 NCRB தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் குறைவாக பதிவாகி இருக்கும் பெருநகரங்களாக கொல்கத்தா, கோயம்புத்தூர், பாட்னா உள்ளிட்டவை உள்ளன.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் கோயம்புத்தூர், பாட்னா பூஜ்ஜியமாகவும், கொல்கத்தா 59 வழக்குகளை கொண்டுள்ளன. பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகளில் மூன்று நகரங்களுமே பூஜ்ஜியமாக இருக்கின்றன.
கொல்கத்தா, கோயம்புத்தூர், பாட்னாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைவாக இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரங்களாக கருதலாம்.