ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

பரவிய செய்தி
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்(49) புற்றுநோய் காரணமாக காலமானார்.
மதிப்பீடு
விளக்கம்
ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் என்பவர் புற்றுநோய் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது உயிரிழந்து விட்டார் எனத் தந்தி டிவி, தினமணி, தினகரன், சூரியன் FM, தினத்தந்தி, ஐ தமிழ் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!#heathstreak | #Zimbabwehttps://t.co/Us3YU5iWfh
— தினமணி (@DinamaniDaily) August 23, 2023
புற்றுநோய் காரணமாக ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் (49) உயிரிழப்பு#heathstreak #Zimbabwe #DinakaranNews https://t.co/5sChJ47g6Y
— Dinakaran (@DinakaranNews) August 23, 2023
உண்மை என்ன ?
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயின் காரணமாகக் காலமானார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பற்றி இணையத்தில் தேடியதில் அது தவறான தகவல் என்பதை அறிய முடிந்தது.
I can confirm that rumours of the demise of Heath Streak have been greatly exaggerated. I just heard from him. The third umpire has called him back. He is very much alive folks. pic.twitter.com/LQs6bcjWSB
— Henry Olonga (@henryolonga) August 23, 2023
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலோங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய பரவும் தகவல் வெறும் வதந்தியே. நான் அவரிடம் பேசியதில் இருந்து இதனை உறுதிப்படுத்த முடிகிறது. மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் மக்களே’ எனக் கிண்டலாகப் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஹீத் இறந்ததாக ஹென்றி ஒலோங்காவும் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது தவறான செய்தி எனத் தெரிந்ததும் ஹீத் நலமுடன் உள்ள செய்தியை அவரிடம் பேசிய பிறகு பதிவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஜிம்பாப்வே நாட்டின் ‘SPORTS AND RECREATION COMMISSION’ இன்றைய தினம் (ஆகஸ்ட் 23ம் தேதி) அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதிலும் ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் உள்ளார் என்றும், சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரவுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி ‘Mid day’ தளத்தில் வெளியான செய்தியில் “இது முழுக்க முழுக்க வதந்தி மற்றும் பொய். நான் உயிருடன் இருக்கிறேன். இத்தகைய செய்தியை வெளியிட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த செய்தியால் நான் காயப்பட்டேன்” என்று ஸ்ட்ரீக் ஒரு வாட்ஸ்அப் செய்தியில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : உ.பியில் தக்காளி கடைக்கு பவுன்சர்கள்… உண்மை தெரியாமல் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !
இதற்கு முன்னர் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்திகள் பற்றிய உண்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்.. திரித்து வெளியிட்ட தந்தி டிவி.. உண்மையான எண்ணிக்கை இதோ !
முடிவு :
நம் தேடலில், ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தவறானது. அவர் நலமுடன் இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.