This article is from Aug 12, 2019

பன்றிக்கறி டெலிவரி செய்வதற்கு எதிராக சோமேட்டோ முஸ்லீம் ஊழியர்கள் போராட்டமா ?

பரவிய செய்தி

மேற்கு வங்கத்தில் பன்றிக்கறியை டெலிவரி செய்ய சொல்வதாகக் கூறி முஸ்லீம் ஊழியர்கள் சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக போர் கொடித் தூக்கியுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக முஸ்லீம் ஊழியர்கள் உடன் இந்து ஊழியர்களும் ஒன்றாக இணைந்து வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அதற்கான காரணத்தை தொடர்ந்து படியுங்கள்.

விளக்கம்

இந்தியா முழுவதும் இருக்கும் இடத்தில் இருந்தே தங்களுக்கு தேவையான உணவைகளை ஸ்விக்கி, உபர், சோமேட்டோ உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இப்படி டெலிவரி செய்யப்படும் உணவிலும் மதப் பிரச்சனைகள் உருவெடுக்கிறது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து அல்லாதவர் கொண்டு வரும் உணவை பெறுவதில்லை என ஆர்டரை நீக்கியத்துடன், அதைப்பற்றி ட்விட்டரில் சோமேட்டோவை டக் செய்து பதிவிட்டு இருந்தார். அதற்கு ” உணவிற்கு மதம் இல்லை ” என சோமேட்டோ நிறுவனம் பதில் அளித்தது இந்திய அளவில் வைரலாகியது.

இப்படி இருக்கையில், மீண்டும் மத வடிவில் சோமேட்டோவிற்கு பிரச்சனை உருவாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவ்ரா பகுதியில் பணிபுரியும் சோமேட்டோ ஊழியர்கள் பன்றிக்கறி மற்றும் மாட்டுக்கறி டெலிவரி செய்வதற்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.


இது குறித்து சோமேட்டோ ஊழியர் கூறுகையில், ” நிறுவனமானது எங்களின் கோரிக்கையை கேட்க மறுக்கிறது. வலுக்கட்டாயமாக பன்றிக்கறி மற்றும் மாட்டுக்கறியை டெலிவரி செய்ய வைக்கின்றனர். இந்துக்களுக்கு மாட்டுக்கறி டெலிவரி செய்வதில் பிரச்சனை இருக்கிறது, முஸ்லீம்களுக்கு பன்றிக்கறி டெலிவரி செய்ய விருப்பமில்லை ” எனத் தெரிவித்து உள்ளனர்.

எங்களின் மத உணர்வுகளுடன் அவர்கள் விளையாடுகிறார்கள். எங்களில், இந்துக்களை மாட்டுக்கறி டெலிவரி செய்ய சொல்வது போன்று, முஸ்லீம் சகோதரர்களை பன்றிக்கறி டெலிவரி செய்ய சொல்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என போராட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.


இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித பதிலும் இல்லை என ஹவ்ரா பகுதியைச் சேர்ந்த சோமேட்டோ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். ஊழியர்களின் போராட்டத்திற்கு திரிணாமூல் காங்கிரஸின் எம்.எல்.ஏவும், அமைச்சருமான ராஜீப் பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

ஹவ்ராவில் இந்து மற்றும் முஸ்லீம் ஊழியர்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முஸ்லீம் ஊழியர்கள் மட்டுமே என எங்கும் குறிப்பிடவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader