This article is from Feb 04, 2019

ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டம் | உலகிலேயே முதல் முறையான திட்டமா ?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நேரடியாக கிடைக்கும் வகையில் குறைத்தபட்ச ஊதிய உத்திரவாத திட்டம் பற்றி பேசினார்.

2019 தேர்தலில் காங்கிரசை வெற்றிப் பெற செய்து ஆட்சியில் அமர்த்தினால் இந்தியாவில் வறுமையில் இருக்கும் ஒவ்வொரு ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருமான உத்திரவாதம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி அவர்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச வருவாய் நேரடியாக செலுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும், ராகுல் காந்தி குறைந்தபட்ச வருமான உத்திரவாதத் திட்டம் பற்றி பேசிய போது, இதுபோன்ற திட்டம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் இருக்கும் என்றும், எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற திட்டம் அமல்படுத்தவில்லை எனக் கூறினார். இந்த திட்டத்தால் மக்கள் பசிக் கொடுமையில் இருக்கமாட்டார்கள் என குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி கூறியது போன்று ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் திட்டம் வேறு எந்த நாட்டிலும் அமல்படுத்தவில்லை எனக் கூறிவிட முடியாது. ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிப்பதில் பல்வேறு திட்டங்கள் உலகின் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதே உண்மை !

குறைந்தபட்ச வருவாய் திட்டம் என்ற தலைப்பில் ஐரோப்பியன் கமிஷன்A Study of national politics 2015 “ என்ற அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில், கிட்டத்தட்ட 35 நாடுகளில் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் திட்டம் பற்றி இடம்பெற்றுள்ளது.

பிரேசில் நாட்டில் அதிபராக இருந்த லுலா டா சில்வா கொண்டு வந்த “ போல்ஸா ஃபெமிலியா “ என்ற குடும்ப உதவித் தொகை வழங்கும் திட்டம் 2003 முதல் செயல்படுத்தப்பட்டது. அடுத்த தலைமுறையினரின் வறுமையை போக்க இத்திட்டம் பெரிதும் உதவியதாகக் கூறப்படுகிறது. வறுமையில் வாடும் மக்களின் குடும்ப வருமானத்திற்கு ஏற்ப குறைந்தபட்ச வருவாயை அரசு அளித்து வருகிறது.

ஐரோப்பிய நாடான பின்லாந்து அரசு ஜனவரி 2017 முதல் உலக அடிப்படை ஊதியம்(Universal basic income) என்ற திட்டத்தைச் செயல்படுத்தியது. இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில்லாத 2000 பேருக்கு மாதம் 560 யூரோக்கள்($685) இந்திய மதிப்பில் தோராயமாக 45,000 ரூபாய் மாதந்தோறும் வழங்கியது.

பின்லாந்து அரசின் இத்திட்டம் ஒரு சோதனை முயற்சியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில், 2015-ல் பின்லாந்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 10% அதிகரித்து இருந்தது. எனினும், UBI திட்டத்தை 2 ஆண்டுகள் மட்டுமே சோதனை முயற்சியாக மேற்கொண்டு  நிறுத்திக் கொண்டது அந்நாட்டு அரசு.

உலக அடிப்படை வருவாய் (UBI) திட்டத்தின் ஆதரவாளரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதரா பேராசிரியர் மற்றும் GiveDirectly என்ற தன்னார்வ அமைப்பின் இணை நிறுவனரான Paul niehaus, ஏழை மக்களுக்கு தொடர்ச்சியாக பணம் வழங்குவது மிகப்பெரிய அளவில் நேர்மறையாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார். அவரின் GiveDirectly அமைப்பின் மூலம் 2011-ல் இருந்து கென்யா, உகண்டா, ர்வாண்டா உள்ளிட்ட நாடுகளில் 3,50,000 மக்களுக்கு 70 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை சிறு சிறு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.

“ UBI ஆதரவாளரான Paul niehaus, இத்திட்டம் அதிக எண்ணிக்கையில் ஏழை மக்களைக் கொண்ட ஆப்ரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான தீர்வில் கடினமாக காணப்படும் என தெரிவித்து இருந்தார் ”.

“ பிரபல ஆங்கிலப் பத்திரிகையான Forbes 2018-ல் UBI(Universal basic income) திட்டத்தை உலகின் மோசமான யோசனை என விமர்சித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது “

உலகின் பல்வேறு நாடுகளில் பல திட்டங்கள் குறைந்தபட்ச வருவாயை அளிக்க இருந்து உள்ளன. ராகுல் காந்தியின் சிந்தனை இதுபோன்ற திட்டங்களில் இருந்தே உதித்து இருக்கும். மேலும், ராகுல் காந்தி கூறிய குறைந்தபட்ச வருவன உத்தரவாதத் திட்டம் சாத்தியமா ? அவர் அத்திட்டத்தை செயல்படுத்துவாரா ? என்றெல்லாம் தெரியவில்லை.

இந்தியா போன்ற அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இவ்வாறான இத்திட்டம் செயல்படுத்த அதிகளவில் நிதி தேவைப்படும்.

அதன்படி, குறைந்தபட்ச வருவாயாக ஏழ்மையில் இருக்கும் 25% வீடுகளுக்கு ஒரு நபர் வீதம் நாளொன்றுக்கு 321 ரூபாய் என வழங்கினால் 7 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும். இதே அளவு 18-20% வீடுகளுக்கு என்றால் 5 லட்சம் கோடி தேவைப்படும். 5 நபர் கொண்ட 25% வீடுகளுக்கு மாதம் 3,180 ரூபாய் என அளித்தால் 2.5 லட்சம் கோடியும், 18-20% வீடுகளுக்கு என்றால் 1.75 கோடியும் தேவைப்படும் என அரசின் சார்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியப் பிடித்த பின் கடந்த ஆட்சியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் உதவித் தொகையாக வழங்கி வந்த ரூ.600-ஐ பெண்களுக்கு 3,500 ரூபாயாகவும், ஆண்களுக்கு 3,000 ரூபாயாகவும் அதிகரித்து மார்ச் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவு ராகுல் காந்தியின் “ குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டத்தின் “ முன்னோட்டமாக பலரும் கருதுகின்றனர்.

2019 தேர்தலில் பலத்த போட்டிகள் நிலவுவதால் இரு பெரும் கட்சியினரும் அதிகளவில் வாக்குறுதிகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Minimum income guarantee could cost Rs 7 lakh crore 

Is Guaranteed Income for All the Answer to Joblessness and Poverty?

Universal Basic Income: A Universally Bad Idea

Finland Will End Its Experiment With Universal Basic Income After a Two-Year Trial

 

Please complete the required fields.




Back to top button
loader