This article is from Jul 19, 2019

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கானது என்ற மாயபிம்பம் !

மருத்துவப் படிப்பிற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வான நீட் ஆனது ஏழை மாணவர்களுக்கு மட்டுமே பெரிதும் பயன்படக்கூடியது என்ற வாசகத்தை நீட்-க்கு ஆதரவளிப்பவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பர். ஆனால், கள நிலவரம் வேறுவிதமாக அமைந்து இருக்கிறது என நீட் தேர்விற்கு பலரும் இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் கூட தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க முடியும், முந்தைய மதிப்பெண் முறையில் இவை சாத்தியமா என்ற கேள்விகளை முன் வைக்கின்றனர். உதாரணமாக, நெல்லையில் துப்புரவு தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் வெற்றிப் பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்து உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் நீட் தேர்வுக்கு முன்பு நிகழ்ந்தது உண்டா ? இதனை எந்த ஊடகமாவது பதிவு செய்தது உண்டா ? என்ற கேள்விகளுடன் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

அப்படியொரு மீம் பதிவை prabhu krishna என்ற முகநூல் கணக்கில் பதிவிட்டு நெல்லை துப்புரவு தொழிலாளியின் மகன் குறித்த தெளிவான விளக்கத்தை அளித்து இருந்தார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற நெல்லை மாணவர் குறித்து நாம் விரிவாக பார்ப்போம்.

திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்தவர் பி.சுதாகர். இவரின் தந்தை பாஸ்கர் திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது தயார் வீட்டு வேலை செய்து வருகிறார். சுதாகர் தமிழ் வழிக் கல்வியில் 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பை முடித்தார். 12- வகுப்பு தேர்வில் 1,046 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில்தான், மருத்துவம் படிக்க நீட் கட்டாயம் என்பதால் 2017-ல் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். இதற்காக அவரின் பெற்றோர்கள் கடன் வாங்கி செலவிட்டு உள்ளனர். ஆனால், 2017 நீட் தேர்வில் சுதாகர் பெற்ற மதிப்பெண்கள் 161 மட்டுமே. இதனால் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்கவில்லை.

எனினும், மருத்துவப் படிப்பை படிக்க வேண்டும் என்ற லட்சியத்தால் தொடர்ந்து இரண்டாம் ஆண்டிலும் நீட் தேர்விற்கு படித்து 2018-ம் ஆண்டிற்கான நீட் தேர்வில் 303 மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதையடுத்து, மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் சுதாகருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இவையனைத்தும் 2018-ம் ஆண்டில் நடந்திருக்கிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் இரண்டு வருட போராட்டங்களுக்கு பிறகே மருத்துவ சீட்டை பெற்றிருக்கிறார்.

இதுவே நீட் தேர்வு இல்லை என்றால் 2016-ம் ஆண்டிலேயே மதிப்பெண் அடிப்படையில் அந்த நெல்லை மாணவனுக்கு மருத்துவ சீட்டு கிடைத்து இருக்கும் அல்லவா !. அதுமட்டுமின்றி மாணவன் சுதாகருக்கு இடஒதுக்கீட்டின் படியே 2018-ல் மருத்துவ சீட்டு கிடைத்து இருந்தது. அதற்கு முந்தைய வருடம் 161 மதிப்பெண்கள் பெற்ற பொழுது 7 மதிப்பெண்களில் மருத்துவ சீட் கிடைக்காமல் போனதாக தன் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இப்படி நீட் தேர்விற்கு இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தால் மட்டும் தான் ஏழை மாணவர்களுக்கு எல்லாம் மருத்துவம் படிக்க வாய்ப்புகள் கிடைக்குமா என்ன ? தனியார் பள்ளிகளில், வசதி படைத்தவர்கள் லட்சக் கணக்கில் பணத்தை கொட்டி தனியார் பயிற்சி மையங்களில் படித்து அதே ஆண்டில் மருத்துவ சீட்களை பெறுவார்கள், ஏழை மாணவர்கள் கடன் வாங்கி பயிற்சி மையங்களில் படித்து இரண்டு ஆண்டுகள் கழித்து தேர்ச்சி பெறுவார்கள் என்றால், இது யாருக்கான நுழைவுத்தேர்வு ?.

முக்கியமானவை :

  • நெல்லை மாணவன் சுதாகர் 12-ம் வகுப்பு படித்து முடித்தது 2016-ம் ஆண்டில், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ சீட் கிடைத்தது 2018-ம் ஆண்டில்தான்.

  • துப்புரவு தொழிலாளி நீட் தேர்வில் வெற்றிப் பெற்றது குறித்து செய்திகளில் வரவே இல்லை எனக் கூறுகின்றனர். இது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் 2018-ல் வெளியாகி இருக்கிறது. 2018-ம் ஆண்டு செய்தியை 2019-ம் ஆண்டிலும் பகிர்ந்து வருகின்றனர், வரும் ஆண்டுகளிலும் பகிரவே செய்வர். ஏனெனில், நீட் ஏழை மாணவர்களுக்கானது என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டுமல்லவா.
  • இரண்டு வருடங்களாக தனியார் பயிற்சி மையம், கடன் என கடுமையான சூழலுக்கு பிறகே நீட் தேர்வில் வெற்றிப் பெற்றிருக்கிறார். இதற்கிடையில், இடஒதுக்கீடு இருக்கக்கூடாது எனக் கூறுகிறார்கள், இடஒதுக்கீடு என ஒன்று இல்லாமல் இருந்தால் மாணவன் சுதாகருக்கு அந்த இடமும் கிடைத்து இருக்க வாய்ப்பில்லை.

ஆக, நீட் ஏழை மாணவர்களுக்கு ஏற்றது என்ற கூறுவது எல்லாம் அநீதியிலும் அநீதியாகும்.

Proof : 

Collector’s noble gesture ensures poor medico’s unhindered education

நீட் தேர்வில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு பாராட்டு

Please complete the required fields.




Back to top button
loader