மோடி முதல் அமித்ஷா வரை.. ஒடிசா தேர்தலில் தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்புவது ஏன்?

மிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என பாஜக-வை சேர்ந்த அமித் ஷா பேசியது அரசியல் வட்டாரத்தில் பெறும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஏழு கட்டங்களாகத் திட்டமிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 5 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இதில் ஒடிசாவை பொருத்தமட்டில் நாடாளுமன்றத்துடன் அம்மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் அம்மாநிலம் அரசியல் கட்சித் தலைவர்களின் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. 

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 2000ம் ஆண்டு முதல் நவீன் பட்நாயக் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் (2019) அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 147 தொகுதியில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக-வின் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சருமான  அமித் ஷா ஒடிசா மாநிலம் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ஒடிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என மொழி ரீதியாகப் பாகுபாட்டுடன் பேசி இருந்தார். 

இதற்கு முன்னர் ஒடிசாவின் அங்குல் நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போன விவகாரம் குறித்துப் பேசினார். அதில், ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர் எனப் பேசியிருந்தார். நாட்டின் பிரதமர் மொழி ரீதியில் மக்களை பிளவுபடுத்தி பேசுவது எந்த வகையில் சரி. 

பிரதமர் மோடி இப்படிப் பேசியதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அப்பதிவில், “வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!” எனக் கூறப்பட்டிருந்தது.   

வி.கே.பாண்டியன்:

தற்போது பிஜு ஜனதா தளத்தில் உள்ள வி.கே.பாண்டியன் என்பவரைக் குறிவைத்தே பாஜக தலைவர்கள் இப்படிப் பேசி வருகின்றனர். 2000ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று (IAS) பஞ்சாப் கேடர் அதிகாரியானார். 

ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சுஜாதா என்பவரை 2002ல் திருமணம் செய்து கொண்ட பிறகு அம்மாநிலப் பணிக்கு மாறினார். 2011ம் ஆண்டு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயகின் தனிச்செயலாளரானார். அதனைத் தொடர்ந்து 2023, அக்டோபர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பிறகு பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. 

இவர் IAS அதிகாரியாக பணியாற்றிய போது பொதுப்பணித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததற்காகக் குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றார்.  கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக இவர் ஆற்றிய பணிகளுக்காக ‘ஹெலன் கெல்லர் விருது’, நூறு நாள் வேலைத்திட்டத்தை நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இரு முறை பிரதமரிடம் விருது எனப் பல சிறப்புகளைப் பெற்றுள்ளார். 

இந்நிலையில் பிஜு ஜனதா தளத்தில் வி.கே.பாண்டியன் இணைந்த பிறகு இவரது தலைமையில் பிஜேடி – பாஜகவிற்கு இடையில் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், கூட்டணி உருவாகவில்லை. தற்போது இவ்விரு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுகின்றன.

ஒடிசா தேர்ததில் வி.கே.பாண்டியன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அவரை வேற்று மாநிலத்துக்காரர் என அந்நியப்படுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. அவரை விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி வருகின்றனர்.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader