பாலின இடைவெளி குறைய பெண்கள் இன்னும் 134 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?

பாலின இடைவெளி குறியீட்டில் உலக வரிசையில் 127ஆவது இடத்திலிருந்து 129ஆவது இடத்திற்கு சென்ற இந்தியா!

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது உலகளவில் 146 நாடுகளின் பாலின சமத்துவத்தை விரிவாக விளக்கும் ஒரு வருடாந்திர ஆய்வறிக்கை ஆகும். இது கடந்த 18 வருடங்களாக, 2006ஆம் ஆண்டிலிருந்து தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

உலகளாவிய பாலின இடைவெளி ஏன் அவசியம்?

கீழே உள்ள நான்கு முக்கிய துணைக்குறியீடுகளின் அடிப்படையில்தான், பாலின இடைவெளிக் குறியீடு கணக்கிடப்படுகின்றது. இதனைக்கொண்டே பாலின சமத்துவம் மதிப்பிடப்படுகிறது.  

  • பெண்களின் பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு (Economic Participation and Opportunity)
  • பெண்கள் கல்வி பெறுதல் (Educational Attainment)
  • பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் வாழும்நிலை (Health and Survival)
  • பெண்களின் அரசியல் அதிகாரம் (Political Empowerment)

இந்த நான்கு துணைக் குறியீடுகளுக்கும், 0% மற்றும் 100% இடையே மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் 100% முழு பாலின சமத்துவத்தையும், 0% முழுமையான பாலின ஏற்றத்தாழ்வையும் குறிக்கிறது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான பாலின இடைவெளிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்த அறிக்கை உலகளவில் ஒரு திசைகாட்டியாக செயல்படுகிறது.

உலகளாவிய பாலின இடைவெளி:

2024ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி மதிப்பெண் 68.5%ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் போது 0.1% மட்டுமே முன்னேற்றம் அடைந்துள்ளது.

தற்போதைய தரவுகளின்படி, உலகளவில் கல்விபெறுவதில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 20 ஆண்டுகளும், பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 152 ஆண்டுகளும், அரசியல் அதிகாரத்தில் பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 169 ஆண்டுகளும் பெண்கள் காத்திருக்கத்தான் வேண்டும் என்ற பகீர் தகவல்களையும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகளவில் சிறந்த நாடுகள்:

 கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளாக, ஐஸ்லாந்து 93.5 சதவிகிதத்துடன், உலகின் பாலின சமத்துவமிக்க நாடுகளில் முதன்மையான நாடாக திகழ்கிறது. அதைத்தொடர்ந்து ஃபின்லாந்து (2nd, 87.5%), நார்வே (3rd, 87.5%), நியூசிலாந்து (4th , 83.5%), ஸ்வீடன் (5th , 81.6%), நிக்கரகுவா, ஜெர்மனி, நமிபியா, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

இதில் இங்கிலாந்து 14ஆவது இடத்திலும், அமெரிக்கா 43ஆவது இடத்திலும் உள்ளன. குறிப்பாக தெற்காசியாவில் வங்காளதேசம் (99ஆவது இடம்) மட்டுமே முதல் 100 நூறு நாடுகளுக்குள் இடம் பெற்றுள்ளது. இதில் நேபாளம் 117ஆவது இடத்தையும், இலங்கை 122ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் பாகிஸ்தான் மற்றும் சூடான் முறையே 145, 146 என கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

கண்டங்கள் வாரியாக பாலின இடைவெளி:

அதிக பாலின இடைவெளிகளை குறைத்துள்ள பிராந்தியங்களின் வரிசையில் ஐரோப்பா 75% உடன் முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து வட அமெரிக்கா (74.8%) மற்றும் லத்தீன் அமெரிக்கா & கரீபியன் பிராந்தியங்கள் உள்ளன. இதில் நமது தெற்காசியப் பகுதி 63.7 சதவிகிதத்துடன் 7ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள பகுதியாக உள்ளது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியம் இதில் இறுதியாக எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பாலின சமத்துவமின்மையில் பின்தங்கியுள்ள இந்தியா:

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் (Global Gender Gap Index) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 64.1 சதவிகிதத்துடன் 129ஆவது இடத்திற்கு சென்றுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். உலகளவில் மொத்தமுள்ள 146 நாடுகளின் வரிசையில், இந்தியா கடைசி 20 இடங்களுக்குள் உள்ளது. முக்கியமாக ‘பெண்கள் கல்வி பெறுதல்’ மற்றும் ‘பெண்களின் அரசியல் அதிகாரம்’ ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவே இந்தியாவில் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.

மேலும் மொத்த தெற்கு ஆசியாவிலும் அரசியல் அதிகாரத்தில் பாலின சமத்துவமின்மை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக தற்போது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின்பு புதிதாக அமைக்கப்பட்ட இந்திய அமைச்சரவையில் உள்ள 30 ஒன்றிய அமைச்சர்களில் (Cabinet Positions) இருவர் மட்டுமே பெண்கள். ஒட்டுமொத்த ஒன்றிய அமைச்சர்களின் எண்ணிக்கையில் ஏழு பேர் மட்டுமே பெண்கள்.

அதே சமயம் இடைநிலைக் கல்வியில் சேர்வதில் இந்தியா சிறந்த பாலின சமத்துவத்தைக் கொண்டுள்ளது. இதே போன்று ‘பொருளாதார பங்கேற்பு’ மற்றும் ‘வாய்ப்பளித்தல்’  பிரிவிலும் (39.8%) இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் பாலின சமத்துவமின்மையை ஒவ்வொரு துணைக்குறியீடுகள்  வாரியாக ஆய்வுசெய்ததில், பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு (Economic Participation and Opportunity) பிரிவில் இந்தியா 142ஆவது இடத்தையும், கல்வி பெறுதலில் (Educational Attainment) 112ஆவது இடத்தையும், ஆரோக்கியம் மற்றும் வாழும்நிலை (Health and Survival) பிரிவில் 142ஆவது இடத்தையும், அரசியல் அதிகாரம் பெறுதல் (Political Empowerment) பிரிவில் 65ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

குறிப்பாக கல்வி பெறுதலில் கடந்த ஆண்டு 26ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 112ஆவது இடத்திற்கும், அரசியல் அதிகாரமளித்தலில் கடந்த ஆண்டு 59ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 65ஆவது இடத்திற்கும் சென்று பின்தங்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக சர்வதேசத் தரவுகளை ஆய்வு செய்கையில், உலகளவில் பாலின சமத்துவம் ஏற்பட்டு, பாலின இடைவெளி குறியீட்டில் சமநிலை அடைய பெண்கள் இன்னும் 134 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது ஐந்து தலைமுறைகளை கடப்பதற்கு சமம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது!

ஆதாரம்:

WEF – Global Gender Gap Report 2024

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader