“புஸ்ஸி ஆனந்த் ஒரு நல்ல தலைவர்” என நடிகர் விஜய் பேசியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

மதிப்பீடு

பரவிய செய்தி:

வெளிய புஸ்ஸி காலுல மாணவர்கள் விழுறாங்க.. இங்க புஸ்ஸியை அண்ணன் நல்ல தலைவர்ங்கிறான்.

புஸ்ஸியிடம் வாத்தி எதோ மேட்டர்ல சிக்கியிருக்கான் போல 

விளக்கம்:

இந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருது வழங்கும் விழாவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளரான புஸ்ஸி ஆனந்தை ஒரு நல்ல தலைவர் என த.வெ.க தலைவர் விஜய் பேசியிருக்கிறார் என புதிய தலைமுறை வெளியிடுவதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பரப்பிவருகின்றனர்.

உண்மை என்ன?

பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறையின் சமூக வலைத்தள பக்கங்களில் தேடி பார்த்ததில் இந்த மாதிரியான எந்தவித நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்பதை அறியமுடிந்தது. 

ஆனால் அவ்விழாவில் கீழ்கண்டவாறு விஜய் பேசியிருந்தார்:
”நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான். நான் தலைவர்கள் என்று சொல்வது அரசியல் மட்டுமல்ல. ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. எதிர்காலத்தில் அரசியலும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தானே?”. இதைத்தான் புதிய தலைமுறை நியூஸ் கார்டாக காலை 10 மணி அளவில் வெளியிட்டுள்ளனர். 

எனவே “புஸ்ஸி ஆனந்த் ஒரு நல்ல தலைவர்” என விஜய் எங்கும் பேசவில்லை என்பது தெளிவாகிறது. அதோடு விஜய் அவ்வாறு பேசியதாக பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு முற்றிலும் போலியானது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

முடிவு :

நம் தேடலில் புஸ்ஸி ஆனந்த் குறித்து விஜய் பேசியதாகப் பரவும் ‘புதிய தலைமுறை’ நியூஸ் கார்டு முற்றிலும் போலியானது என அறியமுடிகிறது.

– இரா.பானு பிரியா 

Please complete the required fields.




Back to top button
loader