முன்னாள் திமுக எம்எல்ஏ மீதான பாலியல் வன்கொடுமை வழக்குப் பற்றி ஊடகங்கள் பேசவில்லையா ?

பரவிய செய்தி

திமுக எம்எல்ஏ 17 வயது பெண்மை பலமுறை கூட்டு பலாத்காரம் செய்து அந்த பிஞ்சு குழந்தையை கற்பழித்து கொலை செய்திருக்கிறான்.. எந்த மீடியாவும் பேசாத கொடுமை

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த 2002ல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனைகளுக்கு பிறகு குஜராத் அரசு விடுதலை அளித்த விவகாரத்திற்கு நாடு முழுவதிலும் பல கண்டன குரல்கள் எழுந்தன.

ஆனால், திமுக எம்எல்ஏ 17 வயது பெண்ணை பலமுறை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை என மாரிதாஸ் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

2012ல் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமாரின் வீட்டில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், பீளமேட்டைச் சேர்ந்த சிறுமி இறந்த விவகாரத்தில் அப்பெண்ணின் மரணத்தில் எழுந்த சந்தேகத்தினால் பெற்றோர்களின் புகார் அடிப்படையில் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இறப்பிற்கு காரணம் என தொடுத்த வழக்கில் 2018ல் வந்த தீர்ப்பில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் மீதான வழக்கு குறித்து தமிழக ஊடகங்கள் செய்திகள் பலவற்றை வெளியிட்டு உள்ளன. யூடர்ன் தரப்பிலும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

வைரல் செய்யப்படும் மாரிதாஸ் பேசும் வீடியோ கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. அப்போதே யூடர்ன் தரப்பில் பதில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. மேலும், முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் மீதான சிறுமி பாலியல் வன்புணர்வு மற்றும் மரணம் வழக்கு தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளார்கள் என்று கட்டுரையும் வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : ஊடகத்தை இழிவாக பேசிய மாரிதாஸிற்கு ஆதாரத்துடன் பதில் !

ஆனால், கடந்த 2020 ஜூலை 31 தேதியன்று, முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமாரும், அவரது நண்பரும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார், இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும், முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாருக்கு மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 தேதியன்று திமுக கட்சி ஒன்றிய செயலாளராகப் பொறுப்பு அளித்துள்ளது.

முடிவு : 

நம் தேடலில், திமுக எம்எல்ஏ 17 வயது பெண்ணை பலமுறை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை என மாரிதாஸ் 2௦2௦ல் பேசிய வீடியோ தற்போது பில்கிஸ் பானு வழக்கு உடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் எம்எல்ஏ மீதான வழக்கு பற்றி ஊடகங்களும், யூடர்ன் தரப்பிலும் கூட செய்திகளும், கட்டுரைகளும், வீடியோக்களும் வெளியிடப்பட்டன.

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் மரணம் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமாரும், அவரது நண்பரும் கடந்த 2020ல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader