This article is from Jan 19, 2018

பராசிட்டமல் மாத்திரைகளால் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறதா ?

பரவிய செய்தி

P/500 என்று எழுதப்பட்ட பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் கவனமாக இருங்கள். இது ஒரு புதிய வெள்ளை மற்றும் பளபளப்பான பாராசிட்டமால் ஆகும். இது “ மச்சுபோ ” என்னும் வைரசை கொண்டிருப்பதாக டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிக இறப்பு விகிதத்துடன் உலகிலேயே மிகவும் ஆபத்தான வைரசில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே இந்த செய்தியை உடனடியாக பகிர்ந்து உங்கள் நண்பர்களை எச்சரிக்கை செய்யுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

“ மச்சுபோ ” வைரஸ் எலியின் சிறுநீர் , எச்சில் மற்றும் மலம் போன்ற சுகாதாரமற்ற சூழ்நிலையில் பரவக்கூடியது. இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரைகள் வழியாக நோய் பரவியதாகக் கூறி இதுவரை எந்தவொரு புகார்களும் எழவில்லை.

விளக்கம்

P/500 பாராசிட்டமால் மற்றும் ஏக்னில் பாராசிட்டமால் மாத்திரைகள் மூலமாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் “ மச்சுபோ ” என்னும் வைரஸ் பரவி வருவதாகவும், இதனால் மக்கள் அத்தகைய மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறி சில நாட்களாக சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

“ மச்சுபோ ” வைரஸ் அல்லது பொலிவியன் குருதிக் காய்ச்சல் (BHF) என்னும் வைரஸ் தொற்றால் கடுமையான காய்ச்சல், தசை வலி, ஈறுகளில் இரத்தபோக்கு, வலிப்பு போன்றவை ஏற்படும். மச்சுபோ வைரஸ் எலியின் சிறுநீர் , எச்சில் மற்றும் மலம் போன்ற சுகாதாரமற்ற சூழ்நிலையில் பரவக்கூடியது. இத்தகைய வைரஸ் தென் அமெரிக்கா பகுதிகளில் மட்டுமே நோய் தொற்றை ஏற்படுத்தியதாக ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று சிங்கப்பூர் நாட்டின் சுகாதார அறிவியல் அமைப்பு (HSA) ஆகஸ்ட் 2, 2017-ல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூர் நாட்டில் P/500 பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்தி மச்சுபோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தவொரு புகார்களும் எழவில்லை என்று ஹெச்.எஸ்.ஏ (HSA) கூறியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மச்சுபோ வைரசால் பாதிப்புகள் ஏற்படுத்தியதாகக் கூறி எந்தவொரு ஆவணங்களும் இல்லை. “ வைரஸ் வாழ்வதற்கும், பெருக்குவதற்கும் ஓர் தொகுப்பாளர் தேவைப்படும். பெரும்பாலான வைரஸ்கள் நீண்ட நாட்களாக இருக்கும் இடத்தில் இருந்து வெளியேறினால் அவைகளால் வாழ இயலாது என்று தொற்று நோய் வல்லுநர் சுனிதா நரேட்டி கூறியுள்ளார்.

இத்தகைய தவறான செய்திகள் இந்தியாவில் பரவிய சில நாட்களில் இந்தோனேசியா நாடுகளிலும் பரவியுள்ளது. இச்செய்தியானது மலேசியா நாட்டையும் விட்டு வைக்காமல் அங்கும் அதிகளவில் பரவி மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

மச்சுபோ வைரஸ் குறித்து மலேசியாவின் சுகாதார இயக்குனர் டாக்டர். நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியதாவது, மச்சுபோ வைரஸ் உள்ளிட்ட பெரும்பாலான வைரஸ்கள் பாராசிட்டமால் மாத்திரைகள் போன்ற வறண்ட சூழ்நிலையில் வாழ கூடியவை அல்ல. பாராசிட்டமால் மாத்திரைகள் மக்களுக்கு பாதுகாப்பானது, எனினும் பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை அறிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது போன்ற மருந்துகள் தொடர்பாக பரவும் வதந்திகளை உண்மை எதுவென்று அறியாமல் பகிர்வது தவறு என்றும், மக்கள் இவையை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader