சீமான் பேசிய பொய்ச் செய்திகள் மற்றும் அறிவியலுக்கு புறம்பான தகவல்களின் தொகுப்பு!

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் பரப்பிய வீடியோ குறித்து யூடர்ன் fact check செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் யூடர்ன் உண்மையை மறைத்து விட்டதாக சாட்டை துரை முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் யூடர்ன் வீடியோவை வெளியிட்டது. அதில், சீமான் பேசிய பொய்யான தகவல்கள் பற்றிய தொகுப்பு வேண்டுமெனில் கமெண்டில் கேட்கும்படி கோரினோம். பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதனை தொகுத்துள்ளோம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு அளிக்கக்கூடிய நேர்காணல்கள் மற்றும் கட்சி மேடைகளில் பேசும்போது பல தவறான தகவல்களை பேசியுள்ளார். அப்படி அவர் பேசியதன் உண்மைத்தன்மையை யூடர்ன் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து இக்கட்டுரையில் காண்போம்.

ஏப்ரல் 2024:

அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்பிரட் நோபல்:

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின் பிரச்சாரத்தின்போது சீமான் பேசுகையில் ”அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்பிரட் நோபல். அவர் தன் பெயரிலேயே ஒரு பரிசையும் அறிவித்துச் சென்றுள்ளார். அதுதான் உலகிலேயே உயரிய பரிசான நோபல் பரிசு” எனக் கூறினார். 

ஆல்ஃபிரட் நோபல் 1866-ல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளைக் கண்டுபிடித்தார். இவர் தனது சொத்தின் பெரும்பகுதியை நோபல் பரிசு வழங்குவதற்காக எழுதி வைத்துள்ளார். அதன்படி, 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜான் டால்ட்டன் என்பவர்தான் அணுவைக் கண்டுபிடித்தவர். 

மேலும் படிக்க: அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல் எனச் சீமான் கூறிய பொய்!

தேர்தல் பத்திரம் மூலம் வேதாந்தாவிடம் திமுக பணம் வாங்கியதா?

தேர்தல் பத்திரம் மூலம் வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் பெற்றுள்ளதாகப் சீமான் பேசி இருந்தார். இதே தகவலை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் துரை முருகனும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வெளியிட்டது. அதனைப் பகுப்பாய்வு செய்து பார்க்கையில், வேதாந்தா நிறுவனம் ரூ.402.4 கோடிக்கு வாங்கிய தேர்தல் பத்திரத்தில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.230 கோடியும் காங்கிரஸுக்கு ரூ.125 கோடியும் சென்றுள்ளது. 

இதனைத்தவிர வேறு சில கட்சிகளுக்கும் வேதாந்தா குழுமம் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வழங்கியுள்ளது. ஆனால், திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் வேதாந்தா எந்தப் பணமும் வழங்கவில்லை. இதிலிருந்து சீமான் பேசியது தவறான தகவல் என்பதை அறியமுடிந்தது.

மேலும் படிக்க: வேதாந்தா குழுமத்திடம் இருந்து திமுக பணம் பெற்றதாகச் சீமான் சொன்ன பொய்!

தேனீக்கள் அழிந்தால் மனித இனம் இருக்காது:

தேனீக்கள் என்ற ஓர் இனம் இல்லையென்றால் 4 ஆண்டுகள் கூட மனித இனம் இருக்காது அழிந்துவிடும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாகச் சீமான் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

ஐன்ஸ்டைன் சொன்னதாக இக்கருத்து நீண்ட காலமாகச் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதுதொடர்பாக ’Snopes’ தளம் ஐன்ஸ்டைனின் புத்தகங்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது எழுத்துக்கள், உரைகள், அறிக்கைகள் மேற்கோள் தொகுப்புகள் என எதிலும் ‘தேனீக்கள்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்து வேறு யாராலோ தெரிவிக்கப்பட்டு இருக்கலாமென “The New Quotable Einstein” என்ற நூலின் தொகுப்பாளரும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: “தேனீக்கள் இனம் இல்லையென்றால் மனித இனமே இருக்காது” என ஐன்ஸ்டைன் கூறினாரா ?

மார்ச் 2024:

தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை:

சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தன்னுடைய பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லாததால் ஆங்கில வழியில் படிப்பதாகக் கூறியிருந்தார். 

2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, 24,310 தொடக்கப் பள்ளிகள், 7,024 நடுநிலைப்பள்ளிகள், 3,135 உயர்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் எனத் தமிழ்நாட்டில் மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. இந்த அனைத்துப் பள்ளிகளிலும் தமிழும் ஒரு கட்டாயப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை எனச் சீமான் தவறான தகவலைப் பேசியுள்ளார். 

மேலும் படிக்க: 37,554 அரசுப் பள்ளிகள் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை எனப் பொய் சொல்லும் சீமான்!

பிப்ரவரி, 2024:

அண்ணா – மூக்கையா தேவர்:

மூக்கையா தேவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சீமான் பேசுகையில், அண்ணாவுக்கு தற்காலிகச் சபாநாயகராக இருந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தது மூக்கையா தேவர்தான் எனக் கூறியிருந்தார். இதே தகவலை அக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் அவர்களும் ஒரு மேடையில் பேசி இருந்தார். 

திமுக 1967ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழ்நாட்டின் (மதராஸ்) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்தச் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணா போட்டியிடவில்லை. அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார். முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1967 மார்ச் 6ஆம் தேதி முதலமைச்சராக அண்ணா பதவி ஏற்றார். 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அதன் ஆளுநர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவேண்டும். அதன்படி அப்போது ஆளுநராக இருந்த சர்தார் உஜ்ஜல் சிங் என்பவர் அண்ணாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்குவதற்கு ஏதுவாக தற்காலிகச் சபாநாயகராக மூக்கையா தேவரை ஆளுநர் நியமித்தார். ஆனால் அவர் நியமிக்கப்பட்ட தேதி மார்ச் 13, 1967

மேலும் படிக்க: அண்ணாவுக்கு மூக்கையா தேவர் பதவிப் பிரமாணம் செய்ததாகச் சீமான், காளியம்மாள் சொல்லும் பொய்!

ஜனவரி 2024:

உதயநிதி கொடுத்த அரசு பொங்கல் தொகுப்பில் திமுக கட்சி சின்னம்:

“அரசு வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்புப் பையில் திமுக கட்சி சின்னம், கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் எல்லாம் ஏன் இடம்பெற்றுள்ளது?” எனச் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்டிருந்தார். 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னமோ, கலைஞர் கருணாநிதியின் புகைப்படமோ, அமைச்சர் உதயநிதியின் புகைப்படமோ இடம்பெறவில்லை. அதில் “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்றும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படமும் மட்டும்தான் இடம்பெற்றிருந்தது. 

அமைச்சர் உதயநிதி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 1000 பேருக்குத் தங்களது கட்சியின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கியதை அரசின் திட்டமெனச் சீமான் தவறாகப் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: அமைச்சர் உதயநிதி கொடுத்த அரசு பொங்கல் தொகுப்பில் கட்சி சின்னம் என சீமான் பேசிய தவறான தகவல்!

செப்டம்பர் 2023:

3,000 ஓட்டு வாங்கியிருந்தால் நான் தீக்குளிப்பேன் – சீமான்:

கும்பகோணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் ’உங்கள் கட்சி ஒரு தொகுதியில் 3,000 ஓட்டு மட்டும் வாங்கினால் போதுமா சார்?’ எனச் சீமானிடம் கேள்வி கேட்டார். அதற்குப் பதில் அளித்த சீமான், ’3,000 ஓட்டு எந்தத் தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள் நான் தீக்குளிக்கிறேன்’ எனச் சவால் விடுத்திருந்தார். மேலும் தங்கள் கட்சி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 37,000 வாக்குகள் பெற்றதாகவும் கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சி 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 3,000-க்கும் குறைவாக எந்தத் தொகுதியிலும் வாக்கு பெறவில்லை. அதே நேரத்தில் துறைமுகத் தொகுதியில் 3,357 வாக்குகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி என்னும் தொகுதியில் 3,776 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் தூத்துக்குடி தொகுதியில் 30,937 வாக்குகளை அக்கட்சி வேட்பாளர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: 3,000 ஓட்டு எந்தத் தொகுதியில் வாங்கினேன் : சீமான்.. துறைமுகம் மற்றும் தளி தொகுதி !

ஆகஸ்ட் 2023:

ராகுல் காந்தி பூணூலைக் காட்டி தான் ஒரு கவுல் பிராமணன் எனக் கூறினார்:

ராகுல் தான் கவுல் பிராமணன் என பூணூலை எடுத்துக் காட்டியதாக செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியிருந்தார். ஆனால், செய்திகளில் ‘ராகுல் காந்தி அவ்வாறு சொன்னதாக ஒரு கோயில் பூசாரி சொன்னார்’ என்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல் அவர் தான் போட்டுள்ள பூணூலை பொதுவெளியில் காட்டியதாக ஒரு புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டுப் பரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ராகுல் காந்தி பூணூலைக் காட்டி கவுல் பிராமணன் எனக் கூறியதாகச் சீமான் சொன்ன பொய்!

ஜூலை 2023:

மியான்மரில் நடந்ததை மணிப்பூர் எனத் தவறாகப் பேசிய சீமான்:

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாம் தமிழர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதைக் காண்பித்து மணிப்பூரில் 13 வயது சிறுமி துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொள்ளப்பட்டார் எனச் சீமான் பேசியிருந்தார். 

ஆனால், அது கடந்த 2022ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தின் போது மியான்மரில் நடந்த சம்பவமாகும்.  மியான்மர் இராணுவத்தின் ‘பியூ சா ஹ்டீ’ என்ற துணை அமைப்பில் இருந்த ‘ஆய் மார் துன்’ என்ற பெண் ஒருவர், மியான்மர் இராணுவத்துக்கு தகவல் கொடுக்கும் உளவாளியாக செயல்பட்டார் என,  ஆயுதம் ஏந்திய போராளிக்குழுவான ‘மக்கள் பாதுகாப்பு படை’ சுட்டுக் கொன்றது. நாம் தமிழர் ஆர்ப்பாட்டத்தில் இந்தப் புகைப்படம் பயன்படுத்துவதற்கு முன்பாகவே குறித்த உண்மை யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: மணிப்பூரில் 13 வயது பெண்ணை முதுகில் சுட்டுக் கொன்றதாக மியான்மர் படத்தைக் காண்பித்துப் பேசிய சீமான்!

ஜனவரி 2023:

24 மணிநேரமும் ஆக்சிஜனை வெளியிடும் மரம்:

சீமான் ஒரு மேடையில் பேசுகையில், “தேள் கொட்டியது என்றால் யாரிடமும் சொல்லாமல் தண்ணீரில் கை விட்டு விட்டீர்கள் என்றால் விஷம் இறங்கிக் கடித்த இடத்திலேயே நின்றுவிடும்” என்றிருந்தார். மேலும் “துளசிச் செடி 20 மணிநேரம் ஆக்சிஜனையும், 4 மணிநேரம் ஓசோன் வாயுவை வெளியிடும் என்றும் ஆலமரமும் அரசமரமும் 24 மணிநேரமும் ஆக்சிஜனை வெளியிடும்” என்றும் கூறியிருந்தார். 

தேள் கடிப்பது தொடர்பாக மருத்துவர் பிரவீனை தொடர்பு கொண்டு பேசியதில், தேள் கடித்ததும், கடித்த இடத்தில் தாங்க முடியாத அளவிற்கு வலி இருக்கும் (Local reaction). அதனைத் தொடர்ந்து படபடப்பு, வியர்த்தல், தலைச் சுற்றல், மயக்கம், BP அதிகரிப்பதோ குறைவதோ ஆகலாம். அனைத்துத் தேள் கடியிலும் இரண்டாவதாகச் சொன்ன அறிகுறிகள் வருவதில்லை. அப்படித் தென்பட்டால் அதன் தீவிரத்தன்மையைப் பொறுத்து  சிகிச்சை அளிக்கப்படும். அந்த அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு Pain relief மருந்து கொடுத்தாலே போதுமானது. ஆனால், தண்ணீரில் வைத்தால் எல்லாம் சரியாகாது என்பதையும் கூறினார்.

இதேபோல், 24 மணி நேரம் எந்த மரமும் ஆக்சிஜனை வெளியேற்றாது என வேளாண் ஆராய்ச்சியாளர் ஜி.கே.தினேஷ் தெரிவித்தார். தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும். ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளியுள்ள பகல் நேரத்தில் மட்டுமே நிகழ்கிறது. அதன்படி நாள் ஒன்றுக்குச் சுமார் 12 முதல் 14 மணி நேரம் மட்டுமே ஒரு தாவரம் ஆக்சிஜனை வெளியேற்றும் என்றார். 

துளசிச் செடி ஓசோன் வெளியிடும் என்பது கற்பனை வாதம். உண்மையில் ஓசோனை வெளியிடும் உயிரினம் எதுவும் இல்லை என இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறியது பிபிசி தமிழ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தேள் கடித்த உடன் தண்ணீரில் கை வைத்தால் விஷம் இறங்கிவிடுமா ?

டிசம்பர் 2022:

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை:

சீமான் ஒரு நேர்காணலில் ‘தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை’ எனக் கூறியிருந்தார். ஆனால், தமிழ் ஆட்சி மொழியாக 1956ஆம் ஆண்டு, டிசம்பர் 27ஆம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் 1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 23ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக நிறுவப்பட்டது. 

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியில் இல்லையா ?.. பேட்டியில் சீமான் சொன்ன தவறான தகவல்கள்!

ஜூன் 2022:

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி பொய்:

திமுக முன்னாள் எம்.பி செந்தில்குமார், பெரியாரைத் தான் பார்த்ததில்லை. ஆனால், காக்கிச் சட்டையில் உதயநிதியை பார்த்தபோது மெய்சிலிர்த்து பெரியாரைப் பார்த்தது மாதிரி இருந்தது என ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் பற்றிப் பேசியதாகச் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

சீமான் குறிப்பிட்டது போல் உதயநிதி வடிவில் பெரியாரைப் பார்ப்பதாகப் பேசியது திமுக முன்னாள் தர்மபுரி எம்.பி செந்தில்குமார் அல்ல. அது ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான எக்ஸ் பக்கத்தில் செய்யப்பட்ட பதிவு. சமூக வலைத்தளத்தில் பரவிய போலிச் செய்தியை உண்மைபோல் சீமான் பேசியுள்ளார். 

மேலும் படிக்க: திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி சீமான் செய்தியாளர்களிடம் சொன்ன பொய்ச் செய்தி!

செப்டம்பர் 2021:

கருணாநிதி நினைவிடம் – ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி:

“கருணாநிதியின் நினைவிடத்துக்கு ரூ.39 கோடி நிதி செலவிட்டு சமாதி கட்டுவோம் என அரசு அறிவிக்கிறது. அது யாருடைய பணம்? ஆனால், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் ஈழத் தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்கிறீர்கள்” எனச் சீமான் பேசி இருந்தார். 

ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்டித்தருதல் மற்றும் இதர மேம்பாடுகளுக்காகத் தமிழ்நாடு அரசு பல நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில், முதற்கட்டமாக 3,510 வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.108.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனச் சட்டசபையில் 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முகாம்களில் உள்ள மின்சாரம், கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தது பிபிசி-யில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒதுக்கப்பட்டதாகச் சீமான் தவறான தகவலைப் பேசியிருந்தார்.

மேலும் படிக்க: கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் சமாதி, ஈழத் தமிழர்களுக்கோ வெறும் 5 கோடியில் வீடு எனப் பேசிய சீமான்.. உண்மை என்ன?

கலைஞர் நீட் தேர்வுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

“நீட் தேர்வை முதன்முதலில் காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. அப்போது அதனை வாழ்த்தியும் வரவேற்றும் கலைஞர் கடிதம் எழுதினார்” எனச் சீமான் பேசி இருந்தார். 

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது 2010ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எதிர்த்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஒன்றிய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு  அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி  கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: கருணாநிதி நீட்டை வாழ்த்தி கடிதம் எழுதியதாகப் பேசிய சீமான்.. உண்மை என்ன?

மார்ச் 2021:

அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள்:

‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் ரத்து செய்வோம் என நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அனிதா பெயரில் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும்’ என அறிவித்து இருப்பதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டது. இக்கருத்தைச் சீமானும் மேடையில் பேசியிருந்தார் (வீடியோவில் 13.20வது நிமிடம்). 

’நியூஸ் 7’ பதிவிட்டு இருந்த வீடியோவில் ஸ்டாலின் எந்த ஓர் இடத்திலும் அனிதா நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் செயல்படுத்தி வரும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ பற்றித்தான் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த அகாடமியை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குவோம் எனப் பேசியுள்ளார். இது நீட் பயிற்சி அளிக்கும் மையம் கிடையாது. இதனை மற்ற ஊடகங்களில் வெளியான செய்தியிலும் உறுதிப்படுத்த முடிகிறது. 

மேலும் படிக்க: அனிதா நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தாரா?

இதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்திலும் வாட்சப்பிலும் பரவிய பொய்ச் செய்திகளை உண்மைபோல் செய்தியாளர் சந்திப்பில் சீமான் பல முறை பேசியுள்ளார். சீமான் பேசுவதற்கு முன்பாகவே அவற்றின் உண்மைத் தன்மையை யூடர்ன் சரிபார்த்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க: வாட்ஸ் அப் வதந்திகளை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் சீமான் !

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader